
திருச்சி பாலக்கரை பகுதியில் இருந்து பிரிந்து வரும் உய்யகொண்டான் கிளை வாய்க்கால்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக புதர்களும் குப்பைகளும் நிரம்பி வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.
இதனால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்து மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று அந்தக் கிளை வாய்க்கால்கள் பார்வையிட்டார்.
நகரப் பகுதிக்குள் செயல்படுத்தப்படாமல் கடந்த 2 கிலோ மீட்டர் தூர வாய்க்காலை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை வைத்து பணிகளை துவங்கி ஒரு வார காலத்திற்குள் அனைத்து பணிகளும் சரி செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக வரும் உபரி நீரானது இந்த வாய்க்கால் மூலம் கடந்து அருகில் உள்ள பாப்பான்குளம் என்ற குளத்தில் நிரம்பி பொதுமக்களுக்கு பயன் அளித்து வந்த நிலையில் தற்போது அந்த குளம் முற்றிலும் வறண்டு போய்க் காணப்படுகிறது.
இனி வரும் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமித்து வைக்க தற்போது தூர்வாரப்படும் இந்த வாய்க்காலில் கண்டிப்பாக மக்களுக்கு உதவும் என்று ஆய்வின் போது தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ''கடந்த அதிமுக அரசில் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகளை அரசு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் எந்தவித முன்னேற்றத்தையும் செய்யாமல் இருந்துள்ளனர்'' என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ''இன்னும் திருச்சியில் இதுபோன்ற செயல்பாட்டில் இல்லாத கால்வாய்களை உடனடியாக தூர்வாரி அவற்றை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் மழைக்காலங்களில் பாதிக்கப்படாத படி அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் முழுமையாக தூர்வாரி பாதாள சாக்கடை இணைப்புகளை முறையாக சரிபடுத்த 6 மாத காலத்திற்குள் இந்த பணிகளை நிறைவேற்ற தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும் தற்போது கரோனா தடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதால் எங்களுடைய முழு கவனமும் அதில் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எந்தெந்த துறைகள் எல்லாம் சரி செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் சரி செய்ய ஆரம்பித்து இருக்கிறோம்.
தற்போது உய்யக்கொண்டான் கால்வாய் இரட்டை கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து அடுத்து வரக்கூடிய மழைக்காலங்களில் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்'' என்றார்.