Skip to main content

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்; எதிர் தரப்பினர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது! 

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

thiruchengodu Scheduled Caste and Scheduled Tribe Prevention of Atrocities Act,
                                                              வெற்றிவேல்

 


திருச்செங்கோடு அருகே, பொதுவெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்கள் இருவர் எழுந்து நின்று பதில் சொல்லாததால், அவர்களை சரமாரியாக தாக்கிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். 

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியில் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (36). இவருடைய உறவினர் சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40). 

 

இவர்கள் இருவரும் கடந்த 4ஆம் தேதி இரவு, அவினாசிப்பட்டி அருகில் உள்ள வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வண்டிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூக இளைஞர்களான கேசவன், பிரகாஷ், அருள், சத்தியமூர்த்தி, விக்னேஷ்குமார், அருள்குமார், கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் அங்கு வந்துள்ளனர். 

 

அவர்கள், வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் இங்கு வந்து ஏன் மது குடிக்கிறீர்கள்? எனக் கேட்டு கண்டித்துள்ளனர். அதற்கு வாலிபர்கள் இருவரும் கீழே அமர்ந்தபடியே துடுக்குத்தனமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. 

 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், 'ஏன்டா... கேள்வி கேட்டால் ஒழுங்கா எழுந்து நின்று பதில் சொல்ல முடியாதா...?' என்றதோடு, அவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். மேலும், இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மறுநாள் காது வலியால் துடித்த வெற்றிவேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பரிசோதனையில், அவருடைய இடப்பக்க காது ஜவ்வு கிழிந்து, இரைச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

 

தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட வாலிபர்கள் இருவரும் மே 5ஆம் தேதி எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் புகார் அளித்ததை அறிந்துகொண்ட எதிர்தரப்பைச் சேர்ந்த கேசவன் மனைவி வித்யா என்பவரும் பதிலுக்கு அவர்கள் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், சம்பவத்தன்று இரவு, வெற்றிவேலும் ராஜமாணிக்கமும் மது போதையில் தன்னை தகாதமுறையில் பேசியதோடு, கீழே தள்ளி தாக்கினர் என்றும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார். 

 

இரு தரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 5 நாட்கள் கழித்தே, அதாவது மே 10ஆம் தேதிதான் இருதரப்பு புகார்களின் மீதும்  எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்துள்ளனர்.

 

வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில் (வழக்கு எண்: 243/2021), வண்டிநத்தத்தைச் சேர்ந்த கேசவன், பிரகாஷ், அருள், சத்தியமூர்த்தி, விக்னேஷ்குமார், அருள்குமார், கார்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது இ.த.ச. பிரிவுகள் 147, 294 (பி), 341, 323, 355 மற்றும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டப் பிரிவுகள் 3 (1) (எஸ்), 2 (2) (விஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். எதிர்தரப்பு சார்பில் வித்யா அளித்த புகாரின்பேரில் வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகியோர் மீது இதச 294 (பி), 323, 354, 506 (1) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்த அனைவருமே திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து வெற்றிவேல், ராஜமாணிக்கம் தரப்பில் அவினாசிப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முருகேசன் கூறுகையில், ''சம்பவம் நடந்த அன்று எங்கள் தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் மது அருந்தியிருந்தால் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கலாம். ஆனால் எழுந்து நின்று பதில் சொல்லவில்லை என்பதற்காக, அவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அத்தோடு சாதி பெயரைச் சொல்லி, உங்களுக்கு கொழுப்பும் திமிரும் அதிகமாகிவிட்டது என்றெல்லாம் இழிவுபடுத்தியுள்ளனர். 

 

thiruchengodu Scheduled Caste and Scheduled Tribe Prevention of Atrocities Act,
                                                            முருகேசன்

 

நாங்கள் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்ததால், வேண்டுமென்றே எங்கள் பசங்க மீதும் பொய் புகார் அளித்துள்ளனர். எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்த பிறகும், எதிர்தரப்பினர் சார்பில் பலர் எங்களிடம் வழக்கை வாபஸ் பெறும்படியும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் தொடர்ந்து டார்ச்சர் செய்கின்றனர். 

 

நாங்கள் இந்தப் பிரச்சினையில் சட்டப்படி எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். உண்மையிலேயே தவறு செய்தவர்களைக் கைது செய்யாமல் அவர்களைத் தப்பவைக்க காவல்துறையினர் உடந்தையாக இருக்கின்றனர்'' என்றார்.

 

இதுகுறித்து எலச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''இருதரப்பும் அளித்த புகாரின்பேரில் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் யாருக்கும் பாரபட்சமாக நடக்கவில்லை. விசாரணையின் அடிப்படையில், பொய்ப் புகார் கொடுக்கப்பட்டது தெரியவந்தால், அந்தப் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்படும்'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தையை விற்க முயன்ற விவகாரம்; மேலும் ஒருவர் கைது

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

The issue of child One more person involved
மருத்துவர் அனுராதா - இடைத்தரகர் லோகாம்பாள்

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர சுகாதார நிலையத்தில் கடந்த 7 ஆம் தேதி திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அப்போது அந்த பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக அனுராதா என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

 

இந்த சூழலில் குழந்தையின் பெற்றோர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்ட மருத்துவர் அனுராதா, குழந்தைகளை விற்பனை செய்யும் கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லோகாம்பாள் குழந்தையின் பெற்றோரிடம் மூன்று லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண் குழந்தையை விற்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து திருச்செங்கோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சட்டவிரோதமாக சிறுநீரக தானம் பெற்று இருப்பதும் தெரிய வந்தது. மேலும் தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து  இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு மருத்துவர் அனுராதா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இடைத்தரகர் லோகாம்பாள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமாரப்பாளையத்தை சேர்ந்த இடைத்தரகர் பாலாமணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகர் பாலாமணி குழந்தையை வாங்கி விற்கும் தொழில்நுட்பத்தை லோகாம்பாளுக்கு கற்றுக்கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.