மாயமான தங்க ஸ்ரீபலி, மூலவரின் திருவாச்சி.. சிலை கடத்தல் விவகாரத்தில் திருச்செந்தூர்?

திருவாச்சி இல்லாமலே மூலவரும், நீண்ட நாட்களாக பயன்பாட்டிலிருந்து தங்க ஸ்ரீபலி சிலையும் மாயமாக சிலை கடத்தலாக இருக்கக் கூடுமோ.? என அறநிலையத்துறை முதற்கொண்டு தலைமை செயலர் வரை அனைவரிடமும் முறையிட்டுள்ளனர் திருச்செந்தூர் கோவில் தாந்தீரிகர்கள்.

தனது காலடியில் வலது புறம் வெள்ளியிலான ஸ்ரீபலி சிலையும், இடதுபுறம் தங்கத்திலான ஸ்ரீபலி சிலையும் கொண்டே அருள்பாலிப்பார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி. அவரை அலங்கரித்ததுப் போல் அவருக்கு பின்புறம் யாளி தலைகள் கொண்ட திருவாச்சியும் உண்டு. திருக்கோவிலை சுற்றியுள்ள எட்டு திசைகள் பலி பீடத்திற்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சரியான நேரத்தில் உணவு வைக்கப்பட்டதா.? என்பதை அறிந்து கண்காணிக்க மூன்று வேளைகள் இந்த ஸ்ரீபலி சிலைகள் கோவிலை வலம் வருவதுண்டு. இதில் தங்க ஸ்ரீபலி ஒரு நேரமும், வெள்ளியிலான ஸ்ரீபலி சிலை இரண்டு நேரமும் வலம் வருவதுண்டு. அது போக, தங்கத்திலான ஸ்ரீபலி சிலை பிரதோஷ காலத்திலும், உத்திர நட்சத்திர காலத்திலும் கட்டாயம் கோவிலை வலம் வருதல் வேண்டுமென்பது கேரளா முறைப்படி தாந்தீரிக பூஜைகளை கொண்ட இந்தக்கோவிலின் நியதி. சமீப காலமாக இது நடைமுறையில் இல்லை என்பதே தற்பொழுதைய குற்றச்சாட்டு.

Thiruchendur Sri Subramaniya Swamy Temple

"குறைந்தது ஐந்து கிலோ எடையும், ஆயிரக்கணக்கான வருட பழமையும் உடைய குடையுடன் கூடிய தங்கத்திலான ஸ்ரீபலி சிலை அளவில்லா மதிப்புடையது. இப்பொழுது சமீபகாலமாக ஸ்ரீபலி சுவாமி உலா வருவதில்லை. விடாய்கர்த்தா சிவசாமியிடம் கேட்டால் அது பின்னமாகியுள்ளது என்கிறார். பின்னமான சிலையையாவது காட்டுங்கள் என்றால் இப்பொழுது கண்ணில் காட்டவில்லை. அது போல் பழமையான திருவாச்சியின் நிலையும். அதுவும் பின்னமாகியுள்ளது என்கின்றனர். இப்பொழுது வரை எதுவும் இல்லாமல் இருக்கின்றார் சுவாமி. ஏறக்குறைய 25 மனுக்கள் கொடுத்தாகிவிட்டது. பலனில்லை. மறைப்பதைப் பார்த்தால் சிலைக்கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்குமோ..? எனும் சந்தேகம் வருகின்றது." என்கிறார் தாமிரபரணி நதிக்குழுவின் வினோத் சுப்பைய்யர்.

Thiruchendur Sri Subramaniya Swamy Temple
இதையும் படியுங்கள்
Subscribe