பக்தர்களின்றி நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

Thiruchendur 'soora samharam' without devotees!

கரோனாத் தொற்று காரணமாக இந்த வருடம், தென் மாவட்ட அறுபடைவீடுகளில், 2 -ஆம் படை வீடான, திருச்செந்தூர் செந்திலாண்டவனின் திருக்கோவிலில்,சூரசம்ஹார விழா முதன்முறையாக பக்தர்களின்றி நடந்தேறியது.

முருகப்பெருமான், அசுரனான சூரபத்மனை வதம் செய்து, தேவர்களைக் காத்த பூமி திருச்செந்தூர். அரிதிலும் அரிதாக செந்திலாண்டவனின் சூரசம்ஹார வதம் நடந்த பகுதி என்ற வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட அருட்பூமி திருச்செந்தூர். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவர்.கடந்த தீபாவளிக்கு மறுநாள் தொடங்கிய சுப்பிரமணிய சுவாமியின் திருவிழாவின் ஏழாவது நாளான, நவ.20 அன்று, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நாள் தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சூரசம்ஹார நிகழ்வு அன்றுஅதிகாலை ஒரு மணிக்கு, நடை திறக்கப்பட்டு, தீபாராதனை உதய மார்த்தாண்ட பூஜைகள் தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம், மூலவருக்குப் பூஜைகள் நடந்தேறின.

இந்த வைபவங்களில் கரோனாத் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மதியம் ஜெயந்திநாதர் அம்பாளுடன் திருவாடுவடுதுறை சஷ்டி மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு நடந்த மகா தீபாராதனைக்குப் பின்னர், மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது. வழக்கம் போல, திருக்கோவிலின் முன்புள்ள கடற்கரையில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், படை பரிவாரங்களுடன் வந்த சூரபத்மனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்.

cnc

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், ஆலய பட்டர்கள், அவர்களைச்சார்ந்தவர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், பாதுகாப்பு போலீசார் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனாத் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நிகழ்ச்சி நடந்த கடற்கரையை ஒட்டி தகர ஷீட்டுகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தென்மண்டல ஐ.ஜி.யான முருகன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Festival Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe