thiruchangodu youth issue

Advertisment

திருச்செங்கோடு அருகே, பொது வெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்களை உள்ளூரைச் சேர்ந்த மாற்று சமூக நபர்கள்தட்டிக் கேட்டபோது, அவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லாததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பட்டியல் சமூக வாலிபரின் காது ஜவ்வு கிழிந்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (36). ரிக் லாரி ஓட்டுநர். இதே ஊரைச் சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40). அவினாசிப்பட்டி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர். இருவரும் உறவினர்கள்.

கடந்த 4ம் தேதி இரவு, அவினாசிப்பட்டிக்கு பக்கத்து ஊரான வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றபோது செயின் ரிப்பேர் ஆனதால் அதைச் சரி செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அப்போது வண்டிநத்தத்தைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞர்கள் கேசவன், பிரகாஷ், அருள், சத்தியமூர்த்தி, விக்னேஷ்குமார், அருள்குமார், கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் அங்கு வந்துள்ளனர்.அவர்கள், 'ஏன் இங்கு வந்து மது குடிக்கிறீர்கள்? என்று கேட்டதாகத் தெரிகிறது. 'பொது இடத்தில் மது குடித்தால் போலீசாரே கேட்பதில்லை. இதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? உங்கள் வீட்டில் வந்து குடித்தோமா?உங்கள் நிலத்தில் உட்கார்ந்து குடித்தோமா?' எனக் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் கீழே அமர்ந்தபடியே பதில் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், 'ஏன்டா... கேள்வி கேட்டால் ஒழுங்கா எழுந்து நின்று பதில் சொல்ல முடியாதா...?' என்று சாதிப் பெயரைச் சொல்லி, உங்களுக்கு அவ்வளவு திமிரா? எனவும் கேட்டு, வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து மறுநாள் பாதிக்கப்பட்டவர்களுடன், அவர்களுடைய உறவினரான அவினாசிப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முருகேசன் என்பவர் நேரில் சென்று எலச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதையறிந்து அங்கு நேரில் வந்த எதிர்த்தரப்பைச் சேர்ந்த கேசவன் மனைவி வித்யா என்பவர், வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகிய இருவர் மீதும் எலச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அந்தப் புகாரில், ''வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் மது அருந்தியபடி ஆபாசமாகப் பேசிக் கொண்டு இருந்தனர். வார்டு உறுப்பினர் என்ற முறையில் நானும், உள்ளூர்க்காரர்கள் சிலரும் அங்கு சென்று தட்டிக்கேட்டோம். அதற்கு அவர்கள் இருவரும் என்னைத் தகாத முறையில் பேசியதோடு கீழே தள்ளி தாக்கினர். உடன் வந்தவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்,' என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் வெற்றிவேல், ராஜமாணிக்கம் தொடர்பாக திமுக பிரமுகர் முருகேசன் பேசினார். ''பொது இடத்தில் மது குடித்தார்கள் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கலாம். இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட வாலிபர்களின் பெற்றோர், உறவினர்கள் எல்லோருமே அவர்களை தாக்கிய மாற்று சமூகத்தினரின் வயல்களில்தான் கூலி வேலை செய்து வருகின்றனர். அதைவிட்டு விட்டு, கேட்ட கேள்விக்கு எழுந்துநின்று பதில் சொல்ல முடியாதா எனஒருமையில் பேசியுள்ளனர்?

அத்தோடு விடாமல் அவர்களை செருப்பு காலால் எட்டிஉதைத்திருக்கிறார்கள். இந்த தாக்குதலில் வெற்றிவேலின் இடப்பக்கக் காது ஜவ்வு கிழிந்து விட்டது. அதற்கு சிகிச்சை எடுத்துள்ளார்.அவர்களை தாக்கியவர்கள் மீது புகார் அளிக்கச் சென்றால், பதிலுக்கு எங்கள் மீதே எதிர்த்தரப்பினர் புகார் கொடுக்கின்றனர். நாங்கள்தான் முதலில் புகார் அளித்தோம். ஆனாலும், எலச்சிப்பாளையம் போலீசார் புகார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் நாலைந்து நாள்களாக இருதரப்பையும் சமாதானமாகப் போகும்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.

எங்கள் மீது தவறு இருந்தால், அதற்கும் எஃப்ஐஆர் போடட்டும். ஆனால் புகார் மீது எஃப்ஐஆர் போடாமல், கவுண்டர் சமூக ஆள்களுடன் சென்று பேசிவிட்டு வாருங்கள் என்று எஸ்ஐயும், இன்ஸ்பெக்டரும் வற்புறுத்துகின்றனர்'' என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக நாம் எலச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் வேத பிறவியைத் தொடர்புகொண்டோம். அவர் அலைப்பேசியை எடுக்காததால் எஸ்.ஐ செங்கோடனிடம் அலைப்பேசியில் பேசினோம். ''புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அன்றே எஃப்ஐஆர் போட்டு குற்றவாளிகளை ரிமாண்டு செய்திருப்போம். அவர்கள் தான் இருதரப்பும் பேசவேண்டும் என்று சொன்னதால் அவகாசம் கொடுத்தோம். கவுண்டர் தரப்பில் வந்துவிட்டார்கள். இன்ஸ்பெக்டர் மேடமும் வெயிட் பண்றாங்க. வெற்றிவேல் தரப்பில் வந்தால் டிஎஸ்பியிடம் கலந்தாலோசித்து விட்டு எஃப்ஐஆர் போடப்படும்"என்றார் எஸ்ஐ செங்கோடன்.

இது ஒருபுறம் இருக்க, எலச்சிப்பாளையம் போலீசார், வெற்றிவேலை தனியாக அழைத்துச்சென்று எதிர்த்தரப்பில் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு புகாரை திரும்பப் பெறுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.இதற்கிடையே, வெற்றிவேல் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள ஒரு காணொலி பதிவு, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில், ''சம்பவத்தன்று பைக் ரிப்பேர் என்பதால் அதைச் சரி செய்து கொண்டிருந்தோம். அப்போது உள்ளூரைச் சேர்ந்த 8 பேர் வந்து எங்களை சாதிப் பெயர் சொல்லி திட்டியதோடு, செருப்பு காலால் எட்டி உதைத்தனர்.இதுகுறித்து புகார் அளித்து 3 நாள்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டியல் சாதிக்கு ஒரு நியாயம்? அவர்கள் சாதிக்கு ஒரு நியாமுங்களா? அவர்கள் எங்களை கொன்னுப்புடுவோம்னு மிரட்டுறாங்க. ஊருக்குள்ள இருக்கவே பயமாக இருக்கு'' என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தால் மல்லசமுத்திரம் அவினாசிப்பட்டி கிராமத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.