
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசலில் துவங்கி திருக்குவளை, கச்சனம், புஷ்பவனம் உள்ளிட்ட வேளாங்கண்ணி வரையுள்ள கஜா புயலால் பெரிதும் பாதித்துள்ள பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு இரண்டாம் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும், பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விவசாயிகள் மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லுாரி வளாகம் முன்பு ஓன்று கூடிய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்." ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.