பிப்ரவரி 21, மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள். தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சியை வாழ்த்தி மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழகத்தின் புதிய பாரதியே!’ என்று ட்விட்டரில் அவ்வப்போது கவிதை எழுதும் கமல்ஹாசனை மகாகவி ரேஞ்சுக்கு போற்றுவதெல்லாம் சரிதான்! ‘2021-ல் மக்கள் நீதி மய்யம் அரசமைக்கும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதும் சரிதான்! ஆனால், சில போஸ்டர்களில் கட்சியை வாழ்த்துவதைக் காட்டிலும், யாரையோ திட்டுவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

Advertisment

third year of makkal needhi maiam... posters in madurai

வாழ்த்தோடு வசவும் சேர்ந்துள்ள அந்த போஸ்டர்களில், ‘3 அமாவாசையில் காணாமல் போகும் கட்சி என்று கூறிய மூடனே! நீ வணங்கும் தெய்வமும் நம்மவரின் சீடனே!’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னொரு போஸ்டரில் ‘மூடர் கூடமே’ என்று பலரைத் திட்டியுள்ளனர். ‘உங்க சாமியும் டாடியும் நம்மவரிடம் கற்க வேண்டும் அரசியல் பாடமே!’ என்று, குறிப்பிட்ட இருவரை விமர்சித்துள்ளனர்.

‘3 அமாவாசையில் கட்சி காணாமல் போகும்’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி என்றோ பேசியதற்கு, அப்போதே கமல்ஹாசன் ’அமாவாசை பற்றி பேசியவர்கள் நிஜ சந்திரனைப் பார்த்திருக்க மாட்டார்கள்..’ என்று பதிலடி தந்தார். ஸ்ரீபிரியாவும் கூட, ‘எங்களுக்கு நாள் குறிக்க நீங்கள் யார்?’ என்று கேள்வி கேட்டார். அதெல்லாம் முடிந்துபோன விஷயம் என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளால் விட்டுவிட முடியவில்லை. அதனால்தான், கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நாள் வாழ்த்து போஸ்டர்களில், அடிமனதில் தேக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டனர்.

Advertisment

third year of makkal needhi maiam... posters in madurai

‘சில வாசங்கள் புரியவில்லையே..’ என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “உங்க சாமியும் டாடியும் நம்மவரிடம் கற்க வேண்டும் அரசியல் பாடமே! என்பது, எடப்பாடி பழனிசாமியையும், நரேந்திரமோடியையும் குறிக்கிறது.” என்றார்.

‘நீ வணங்கும் தெய்வமும் நம்மவரின் சீடனே! என்பதற்கு அர்த்தம் கேட்டோம். “அதுவந்து.. அதுவந்து..” என்று தயங்கிவிட்டு, “எங்க தலைவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அந்த அமைச்சரோ தெய்வங்களை வணங்குவதற்கு கோவில் கோவிலாகச் சுற்றி வருபவர். அரசியவாதி ஆயிற்றே! அவரைத் திட்டினால் வலிக்குமா? வலிக்காதா? என்று தெரியவில்லை. அதனால்தான், தசாவதாரம் எடுத்த தலைவரின் சீடனாக தெய்வத்தை ஆக்கிவிட்டோம்.’ என்று சிரித்தார்.

Advertisment

third year of makkal needhi maiam... posters in madurai

‘இந்த போஸ்டர்களின் பின்னணியில் இன்னொரு அரசியல் ஒளிந்திருக்கிறது..” என்றார், சிம்பு ரசிகர் ஒருவர். “கமலையும் மக்கள் நீதி மய்யத்தையும் ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில், கமல் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் வெறுப்பேற்றும் விதத்தில் ரஜினியையும் அஜித்தையும் புகழ்கிறார். அந்தக் கடுப்பில்தான், போஸ்டர்களில் ராஜேந்திரபாலாஜியை மட்டுமல்ல, அவர் வணங்கும் தெய்வத்தையும் அக்கட்சியினர் விட்டு வைக்கவில்லை.” என்றார்.

‘உள் விவகாரம்’ தெரியாத மதுரைவாசிகள் பலரையும் மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர்கள் மண்டை காய வைக்கின்றன. மக்களைக் குழப்புவதும் ஒருவித அரசியல் போலும்!