Third leopard caught in Tirunelveli

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது மேற்குத்தொடர்ச்சி மலை. இப்பகுதியில் இருந்து பாபநாசம், வி.கே.புரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட இடங்களுக்கு வனவிலங்குகளான யானை, சிறுத்தை, கரடி ஆகியவை ஊருக்குள் புகுந்து வரும்சம்பவம் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் வளர்ப்பு விலங்குளான நாய், ஆடு மற்றும் மாடுகளை கடித்து குதறுவதும் உண்டு. அதே போன்று ஊருக்குள் புகும் யானை கூட்டங்கள் விளைநிலங்களில் உள்ள நெல், கரும்பு போன்ற பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் கடந்த 16 ஆம் தேதி (16.05.2024) அதிகாலை வி.கே. புரம் அருகே உள்ள வேம்பையாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான ஆட்டையும், அனவன்குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது ஆட்டு கொட்டகையில் இருந்த ஆட்டையும் சிறுத்தைகள் தாக்கி வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றது. இது தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு செய்ததில் இந்த 2 ஆடுகளையும் இழுத்துச் சென்றது வெவ்வேறு சிறுத்தைகள் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. அதனைத்தொடர்ந்து அனவன் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நேற்று (21.05.2024) இரவு ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. இந்நிலையில் இன்று (22.05.2024) அதிகாலை மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. அம்பாசமுத்திரம் அருகே கடந்த ஐந்து நாட்களில் மூன்று சிறுத்தை சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.