
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது தவணையாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் இருந்து இன்று மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வட மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் சிறப்பு ரயில்கள் ஆக்சிஜன் டாங்கர்கள் கொண்டு வரப்படுகின்றன.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர் லாரிகளில் 66.12 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இன்று மதியம் மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது. இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட் வேகன்களில் இருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு வந்த 24 ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.
இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1393.71 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்சிஜன் லாரிகளை தேவையான இடங்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனி சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.