Skip to main content

புனித கங்கையின் யோக்கியதை? கி. வீரமணி 

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
g

 

கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த  அக்டோபர் மாதம், மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று CFTRI என்ற அமைப்பிலிருந்து, (மைசூரைச் சார்ந்த  Central Food Technological Research Institute -- “மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிலையத்தின் சார்பில்)


நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் தரப்படும் ‘பிரசாதம்’ எத்தகைய  தன்மையது, எவ்வளவு சுகாதாரக் கேட்டுக்கான நச்சுப் பொருள்கள், நோய் பரப்பும் கிருமிகள் பரவ வாய்ப்பேற்படுத்தும் தன்மையது என்பதுபற்றி 30 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்துள்ளதோடு, அந்த புனித பிரசாதங்கள் எவ்வளவு சுகாதாரக் கேட்டுடன் - சுகாதாரக் கேடான Unhygienic  வகையில் தயாரிக்கப்படுகிறது;  தயாரிக்கப்படுவது மட்டுமல்ல; அவைகளை அறைகளில் வைத்துப் பாதுகாக்கும் (Storage) முறைகளிலும் கேடு ஏற்படுகிறது என்ற தகவல்களை ஆராய்ச்சி செய்து கண்டறிந்து கொடுத்த பிறகும்கூட, அவற்றைத் தூய்மையுடன் தயாரிக்கவோ, பாதுகாக்கவோ எந்தவித முயற்சிகளும் சம்பந்தப்பட்ட கோயில் பிரசாதங்களை வழங்கும் (விற்கும் என்பதே சரியான சொல் ஆகும்) அதிகாரிகள் அக்கறை காட்டவே இல்லை என்று தெரிவித்துள்ளது.

 

இத்தகவல் ‘இந்து’ நாளேடு (9.11.2018) பக்கம் - 6 சென்னை பதிப்பு Southஎன்ற பக்கத் தலைப்பில் வெளியாகியுள்ளது.
லட்டுகள், காஜ்ஜய்யா, பாயாசம் முதலிய ‘பிரசாதங்கள்’ இவற்றில் அடங்கும். (பழனி பஞ்சாமிர்தமும் இதில் இருக்கிறதா - தெரியவில்லை).

இதைத் தயாரிக்கும் கோயில்களில் இந்த பிரசாதம் என்கிற, உட்கொள்ளப்படுகின்ற உணவுப் பண்டங்கள் சுகாதாரக் கேடின்றி, முறையாக பாதுகாக்கப்பட்டு பக்தர்களிடையே விநியோகிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முடிவு ஆகும்!

 

‘புனிதம்’ என்ற புரட்டு!

இதே போன்று தனியார் உணவு விடுதிகளிலோ அல்லது உணவுப் பண்டம் (பிஸ்கட் போன்ற) விற்கும் கடைகளிலோ நடந்தால் உடனே பாயும் சட்டம் - ஏன் கோயில், பக்தி என்றால் கைகட்டி, வாய் பொத்தி, மவுனமாகி, நிற்க வேண்டும்?

ஒரே காரணம் “புனிதம்” (Holy)  என்ற புரட்டுதானே!
பக்தி மனிதனை வாழ வைக்கப் பயன்படுகிறதா? ஆன்மிகம் என்று இல்லாத ஒன்றை கற்பனையாக (ஆத்மாவே புரட்டு) வைத்து ‘புருடா’ விடும் பெரிய மனிதர்கள் - மதவாதிகள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள்?

நாடு  முழுவதும் விநியோகிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோயில்களில் எந்த ஒழுங்கும், கட்டுப்பாடும் இதுகுறித்து காட்டப்படுவதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது! மைசூருவில் உள்ள ஒரு மத்திய அரசுத் துறையான Traditional Foods and Sensory Science  (“CFTRI”) என்ற அமைப்பின் தலைவர் கே. வெங்கடேசமூர்த்தி என்பவர்,
“நாங்கள் எப்படி “பிரசாதம்” சுகாதாரக் கேடின்றி தயாரிப்பது, பாதுகாப்பது, விநியோகம் செய்யுமுன்  தர நிர்ணயம் செய்தல் என்பன குறித்து Food Safety and Standards Authority of India - FSSAI  என்ற மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திற்கு நாங்கள் எடுத்துக் கூறியும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில், நாட்டில் உள்ள முக்கிய கோயில் பிரசாதங்களின் தூய்மை, தரம் இவைபற்றி நிர்ணயித்து கண்காணிக்கும் பணி கடமை இந்த ஆணையத்தினுடையதாகும்.

உயிர்க் கொல்லும் தொற்று நோய்கள்!

அதுபற்றி காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை; விளைவு உயிர்க்கொல்லும் தொற்று நோய்கள்தான் - பக்தர்களுக்கு!
பக்தி - புனிதத்தின் புரட்டு எப்படி மனிதர்களை கொல்லுவதற்குப் பயன்படுகிறது பார்த்தீர்களா?


பக்தி என்றவுடன் எதையும் விழுங்கும் மூடமனிதர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவிடும் ஆபத்து இதன் மூலம் பெருகிடுவது பேரபாயம் அல்லவா?
இதை அமல்படுத்த அந்தத் துறை - கோயில் விவகாரம் ஆனபடியால் இதில் துணிந்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
“புனிதம்” என்றால் இப்படி மூடநம்பிக்கை பரப்புதலும், பாதுகாப்பதும் தானா?
‘புனித கங்கை’ (Holy Ganges) என்ற நதியின் தூய்மைக்கு மக்கள் வரிப் பணம் இதுவரை பல்லாயிரம் கோடி பாழ்படுத்தப்பட்டு வருகிறது!

புனித கங்கையின் யோக்கியதை?

பலன் ஏதும் உண்டா? சான்றாக புனித கங்கை நீர் என்று பாட்டில்களில் அடைத்து விற்றபோது “உள்ளே குடிக்காதீர்; தலையில் தெளித்துக் கொள்வீர்” என்று எச்சரிக்கை லேபிள் ஒட்டப்பட்டது மகா கேவலம் அல்லவா?


கையில் பலரும் கறுப்பு, சிகப்பு - காவி என்று பல வண்ணங்களில் கயிறு கட்டிக் கொண்டிருப்போர் அந்த கைக் கயிறுகளில் எவ்வளவு நோய்க் கிருமிகள் இருந்து உணவு உண்ணும்போதுகூட உள்ளே சென்று நோய்களை உண்டாக்கும் அபாயம் பற்றி பலரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே!


காரணம் ‘புனிதம்!’ ‘புனிதம்’ என்ற மூடத்தனம்! முடை நாற்றம் தானே?
“புனிதம்” (Holy)  என்று முத்திரை குத்தி விட்டால், கேள்வி கேட்காதே, ஆராயாதே, நம்பு, கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள், சந்தேகப்படாதே என்ற மூடத்தனத்திற்குரிய கான்கிரீட் பூச்சுதானே!
இந்து மதத்தில் தானே இந்த பிரசாத வியாபாரம்? வேறு மதங்களில் இல்லை. நாம் சுட்டிக் காட்டினால் இந்து மதத்தைப்பற்றி மட்டும் பேசுகிறார்கள் என்று பழி தூற்றுவது நியாயமா? சிந்தியுங்கள்!
 

சார்ந்த செய்திகள்