Skip to main content

பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறித்த கொள்ளையர்கள்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

Thieves stole chain for couple on bike

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி. இவர் தனது மனைவி விஜயாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு விருத்தாசலத்தில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த வெள்ளாற்று பாலத்தில் இவர்கள் வாகனம் சென்று கொண்டிருந்த நிலையில், இவர்களைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் கருணாநிதியின் வாகனத்தை திடீரென வழிமறித்து உள்ளனர். இதை எதிர்பார்த்திராத கருணாநிதி மற்றும் அவரது மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். 

 

அப்போது அந்த மர்மநபர்கள் விஜயாவின் கழுத்தில் இருந்து எட்டு சவரன் தாலி செயினைப் பறிக்க முயன்றனர். விஜயா சுதாரித்துக் கொண்டு தாலி செயினை தன் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு உள்ளார். இதனைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்த, சுதாரித்துக் கொண்ட அந்த மர்மநபர்கள் கையில் கிடைத்தவரை போதும் என்று செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

 

இருப்பினும், வாகன ஓட்டிகள் மர்மநபர்களை விரட்டிச் சென்ற நிலையில், அவர்கள் சிக்காமல் தப்பித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கீழே விழுந்ததில் காயமடைந்த கருணாநிதி, விஜயா ஆகிய இருவரையும் மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் தப்பிச் சென்ற மர்ம கொள்ளையர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் விருத்தாசலம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்