thieve arrested under goondas

சேலத்தில், தங்கையின்கணவருடன் சேர்ந்து வழிப்பறி, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை, இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கடந்த 2019ம் ஆண்டு, சேத்துப்பாதை தேங்காய் கிடங்கு அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 3.50 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் முத்து (32) என்பவரை கைது செய்தனர்.

Advertisment

இந்த வழக்கில் பிணையில் விடுதலையான முத்து, அவருடைய தங்கை மீனா, இவருடைய கணவர் ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து கடந்த மே மாதம், சேலம் ஜெயா திரையரங்கு அருகே உள்ள ஒரு மின்சாதனப் பொருள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்னணு மற்றும் மின்சாதன பொருள்களை திருடிச் சென்றனர். அதேபோல் கடந்த மே 31ம் தேதி, குகை பகுதியில் முத்துவும், அவருடைய சகோதரியும் கத்தி முனையில் ஒருவரிடம் 4500 ரூபாய் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இந்த இரு சம்பவங்களிலும் செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இவர்களில் முத்து மீது ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. எனினும், அவர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை இரண்டாவது முறையாக, சேலம் மாநகர காவல்துறையினர் கடந்த வாரம் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Advertisment

துணை ஆணையர் லாவண்யா பரிந்துரையின்படி, மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின்பேரில் முத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முத்துவிடம், கைது ஆணை நேரில் வழங்கப்பட்டது.