சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி மரணம்! குடும்பத்தினர் சாலை மறியலால் பதற்றம்! 

Thieve  arrested and jailed for theft passes away

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமுருகன்(40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து வடக்குத்து பகுதிக்கு குடிபெயர்ந்தாக கூறப்படுகிறது. மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்து வந்த செல்வமுருகன், முந்திரி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு நெய்வேலியில் நடந்த ஒரு மோதலில் முதன்முதலாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பகண்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருட முயற்சித்ததாக வழக்கும், 2017 ஆம் ஆண்டு இருசக்கர வாகன திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு மற்றும் கரோனா தொற்று காலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதால் வழக்கு என பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26ல்பெண் ஒருவர் அணிந்திருந்த செயினை பறித்ததாக நெய்வேலி நகரத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட செல்வமுருகனிடம் இருந்து ஒரு பவுன் தங்க சங்கலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, விருத்தாச்சலம் கிளை சிறையில் கடந்த 30.10.2020 அன்று அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 02-ஆம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்பு செல்வமுருகனை விருத்தாச்சலம் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் கடந்த 04-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாக கூறி செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Thieve  arrested and jailed for theft passes away

அதேசமயம் செல்வமுருகன் மனைவியான பிரேமா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், அவரை காவல்துறையினர் துன்புறுத்தியதாகவும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.

மேலும் பிரேமா மற்றும் பிள்ளைகள், உறவினர்களுடன் நேற்று திடீரென சென்னை- கும்பகோணம் சாலையில் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி பாபு பிரசாந்த், வட்டாட்சியர் பிரகாஷ், காவல் ஆய்வாளர் மலர்விழி மற்றும் ஏராளமான போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேமா, தன்னுடைய கணவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது. போலீசார்தான் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக சந்தேகப்படுகிறேன். எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தனது குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூறினார். அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Cuddalore police virudhachalam
இதையும் படியுங்கள்
Subscribe