
"வீடுகளைத் திறந்து வைத்துத் தூங்குபவர்களா நீங்கள்? நிம்மதியா தூங்குங்கள்... மத்ததை நாங்க பாத்துக்கறோம்..." என இல்லங்களைக் குறி வைத்துத் திருடும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பல் அதிகாலை நேரங்கள் வீடுகளில் செல்போன்களை திருடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்துள்ளது.
கோவையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில் இப்படி கைவரிசை காட்டிய இந்த கும்பல் குனியமுத்தூர், வெரைட்டி செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருடி வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து வந்த திருட்டு புகார்களையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தனிப்படை போலீஸார் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்தனர். திண்டுக்கல் மாவடத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, செளரியம்மாள், ரமேஷ் மற்றும் அந்து ஆகியோர்தான் இந்த திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரிகள் இருவரும் செல்போன்களை திருட, அவற்றை கள்ளச் சந்தையில் தம்பிகள் விற்பனை செய்துவந்துள்ளனர். கோவையில் கடந்த ஆறு மாதமாக இவர்கள் திருடி வருகிறார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.