
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பாலாஜி நகர் பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர், சுப்பிரமணியபுரம் பகுதியில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர், வழக்கமாக தன்னுடைய குழந்தைகளை காட்டூரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். அதேபோல், 14ஆம் தேதி வீட்டைப் பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் 2 வெள்ளி வளையல்கள் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருவெறும்பூர் காவல்நிலையத்தில் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான நின்றுகொண்டிருந்த இருந்தவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர், திருச்சி ஏர்போர்ட் புதுத் தெருவைச் சேர்ந்த ஆன்ட்ருஸ் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர் உமா மகேஸ்வரி வீட்டில் திருடியது உறுதிப்படுத்தப்பட்டு அவரிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.