
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 3 தனிப்படை அமைத்து, கொள்ளையர்களைத் தேடிவந்தனர். மேலும், ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த அதாவுர் ரஹமான் என்பவரின் வீட்டின் இரும்பு கம்பிகளை வளைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோ மற்றும் அறைகளில் இருந்த 85 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் பணத்தைக் கொள்ளையடித்தது சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நவீத் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவரைப் பிடிக்க போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது பெரியபேட்டை பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க, அந்த வீட்டுக்குச் சென்று நவீத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அப்போது நவீத்திடம் விசாரணை மேற்கொண்டதில், வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியில் அதாவுர் ரஹமான் என்பவரின் வீடு, ஆசிரியர் நகர் பகுதியில் ஆசிரியரின் வீடு மற்றும் ஏலகிரிமலையில் உள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீடு, அதே மலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி உரிமையாளரின் பண்ணை வீடு என பல்வேறு வீடுகளில் புகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நவீத்திடமிருந்து 20 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையம் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள 4 வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் நவீதுக்கு உடந்தையாக இருந்த, தற்போது தலைமறைவாகியுள்ள இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.