Advertisment

9 மாவட்டங்களில் 65 திருட்டு வழக்குகள்; திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Thief arrested in 65 theft cases in 9 districts

Advertisment

சேலம் அருகே, வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட திருடன் மீது 9 மாவட்டங்களில் 65க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் ஜூலை 1 ஆம் தேதி, வீட்டைப்பூட்டி விட்டுக் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நள்ளிரவில் அவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் நகைகள், 92 ஆயிரம் ரூபாய் பணம்ஆகியவற்றைத்திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் கெங்கவல்லி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜூலை 8 ஆம் தேதி, ஒதியத்தூர் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவர்தான் அங்கமுத்து வீட்டில் நகை, பணத்தைத்திருடியவர் என்பது தெரிய வந்தது. அத்துடன், அவர் மீது பல மாவட்டங்களில் திருட்டுவழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், திருநங்கை வேடமிட்டு பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. விசாரணையில் அந்த நபர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மன்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (29)என்பது தெரிய வந்தது. திருடிய நகைகளை பெரம்பலூரில் உள்ள ஒரு அடகு கடைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவர் காவல்துறை வசம் சிக்கிக் கொண்டுள்ளார். அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வெங்கடேஷை கைது செய்த காவல்துறையினர், வாழப்பாடி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertisment

பிடிபட்ட வெங்கடேஷ் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் 65க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், இதுவரை காவல்துறை வசம்சிக்காமல் போக்குகாட்டி வந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அங்கமுத்து வீட்டில் திருடிய நகைகளில் நான்கு பவுன் நகைகளை மட்டும் பெரம்பலூரில் உள்ள ஒரு அடகு கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்குஅடகு வைத்து, அந்தப் பணத்தில் கடந்த ஒரு வாரமாக உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. விரைவில் அவரைக் காவலில் எடுத்து, சேலம் மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் இதுவரை கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

arrested police Salem Theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe