ADVERTISEMENT

“கல்லை வைத்து பல்லைத் தட்டினர்; வாயில் கல்லைத் திணித்து அடித்தனர்” - பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டவர் பேட்டி

11:39 PM Mar 29, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: “குற்றச்செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உறுதி அளிக்கிறேன்.”

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்களில் ஒருவரான செல்லப்பா என்பவர் பேசியபோது, “என் பெயர் செல்லப்பா. நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வருகிறேன். மாயாண்டி மட்டன் கடை வைத்துள்ளேன். மார்ச் 7 அம் தேதி எனது நண்பன் சுபாஷிற்கும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ஒருவருக்கும் காதல் காரணமாக சிறிய சண்டை ஆகிவிட்டது. என் நண்பனுக்காக நான் போன போது அவர்கள் தூத்துக்குடியில் இருந்து 4 பேரை அழைத்து வந்து என் கடையில் ஷட்டரை அடைத்தனர். உன் உடன்பிறந்தவர்களை உயிருடன் விடமாட்டேன் என்று ஆயுதங்களுடன் மிரட்டினார்கள்.

இது குறித்து நாங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். காவல்துறையினரும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், மறுநாளும் அதேபோல் வந்தார்கள். எங்கள் உயிரைப் பாதுகாக்க வேண்டி நாங்கள் அவர்களை காவலர்களிடம் பிடித்துக் கொடுத்தோம். காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டுத்தான் பிடித்துக் கொடுத்தோம். ஆனால், எஸ்.ஐ ஏன் எதற்கு என்று கேட்காமல் என் அண்ணனை அடித்தார். தொடர்ந்து எதிர்த்தரப்பினர் 3 பேர், நாங்கள் 6 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு எங்கள் சட்டையையும் லுங்கியையும் கழற்றச் சொன்னார்கள். அங்கு ஏ.எஸ்.பி கையில் கிளவுஸ் உடன் வந்தார். என் பெயரைச் சொல்லி பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.ஐ முருகேசன், சதாம், விக்னேஷ் ஆகிய காவல்துறையினர் என்னை பிடித்துக் கொண்டனர். ஏ.எஸ்.பி ஒன்றரை ஜல்லியை வைத்து பல்லை தட்டித் தட்டி உடைத்தார். கல்லை வாயினுள் விட்டும் கன்னத்தில் அடித்தார்கள். என் ஒருவனுக்கு மட்டும் 100 மி.லி. ரத்தம் வந்திருக்கும். பின்னர் என் அண்ணன், தம்பி என அனைவரையும் அழைத்து வந்து இதே போல் கொடுமை செய்தார்கள். அதன் பின் அந்த ரத்தத்தை எங்களையே கழுவச் சொன்னார்கள் நாங்கள் தான் கழுவி விட்டோம். 10 நிமிடம் கழித்து வந்து லத்தியால் அடித்தார்கள். இன்னொரு அண்ணனையும் பிறப்புறுப்பில் காயப்படுத்தி சங்கடத்திற்கு ஆளாக்கினார்கள். அதனால் நியாயம் கேட்டுப் போராடுகிறோம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT