ADVERTISEMENT

சிவசங்கர் பாபா விவகாரம்; ஐந்து பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்...

07:07 PM Jul 05, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா'வின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா மற்றும் பாரதி ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை எனக் கூறி , ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 2 வாரங்களுக்கு ஐந்து பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் எனவும் தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT