
அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கியதற்காக என் மீது 7 பிரிவுகளில் வழக்கு போட்டார்கள். அதே பள்ளியில் இன்று அமைச்சராக போலீஸ் பாதுகாப்போடு வந்து சைக்கிள் வழங்குகிறேன் என்று பழைய அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பள்ளி மாணவிகளிடம் அமைச்சர் மெய்யநாதன் பகிர்ந்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் ஆலங்குடி வட்டாட்சியர் விசுவநாதன், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், எஸ்.எம்.சி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, ''கொத்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதித்த பள்ளிகளாக இருந்தது. இங்கு படித்த பலரும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசுப் பணிகளில் உள்ளனர். அதேபோல நீங்களும் சாதிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆலங்குடி தொகுதி எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆலங்குடி அரசுப் பள்ளிக்கு சைக்கிள் கொடுக்க போனபோது விழாவை நிறுத்திவிட்டார்கள். அதே நேரத்தில் கொத்தமங்கலம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிக்கு வந்து சைக்கிள்களை கொடுத்துவிட்டுச் சென்ற சில நாட்களில் அப்போதைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, மாணவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த சைக்கிள்களை அறையின்பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து எடுத்து மாணவ, மாணவிகளுக்கு கொடுத்ததாக என் மீது கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த வழக்கை சட்டப்படி சந்தித்து வருகிறேன். அதே ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான என்னை முதலமைச்சர், அமைச்சராக்கி போலீஸ் பாதுகாப்போடு வந்து சைக்கிள் வழங்க வைத்துள்ளது பெருமையாக உள்ளது. மகளிர் பள்ளிக்கு 7 வகுப்பறை கட்டடமும், ஆண்கள் பள்ளிக்கு 9 வகுப்பறை கட்டடமும் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை மாணவர்களான நீங்கள் தான் செய்யப் போகிறீர்கள். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது பள்ளி பாடங்களுடன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளையும் புகட்டினார்கள் ஆசிரியர்கள்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)