
பவானி ஆற்றில் பிணமாக மிதந்து வந்த உடலை அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் கிராமம் உள்ளது. இங்குள்ள சிரையாம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கு எதிரே பவானி ஆற்றங்கரை உள்ளது. நேற்று மாலை அந்த பவானி ஆற்றங்கரையில் அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அழுகிய நிலையில் தலை, கை, கால்கள் இல்லாமல் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நிர்வாண நிலையில் ஆற்றில் மிதந்து வந்ததைக் கண்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கவுந்தபாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்பநாய் ஜெர்ரி தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்து தகவல் பரவியதும் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. கவுந்தப்பாடி போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக இறந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இறந்த நபரின் கை, கால் மற்றும் தலை ஆகியவை வேறு எங்கும் வீசப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக உடலை பவானி ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோபி, சத்தியமங்கலம் சப் டிவிஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாயமானவர்களின் ஆண்கள் பட்டியலை சேகரித்து அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணையே தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் இறந்தவரின் தலை மற்றும் உடலை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.