Skip to main content

முதல்வர் நிவாரண நிதி விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை... வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அரசு தரப்பு விளக்கம்

Published on 26/06/2020 | Edited on 27/06/2020
 There is nothing to hide in the financial details of CM relief! Govt.

 

கரோனா பேரிடரையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற நன்கொடை விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம், அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கவும், ஊரடங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் மற்றும் தனிநபர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில்,  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை, மக்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால்,  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு, என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல்,  38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 There is nothing to hide in the financial details of CM relief! Govt.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், அரசின் நிதித்துறை துணை செயலாளரும்,  முதல்வரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளாசெல்வி சார்பில்,  பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது..

அதில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தமிழக முதல்வர் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக,  தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்கள், கார்பரேட் நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்,  பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர். அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தின் வாயிலாக பணம் செலுத்தியவர்கள் விபரம் அதில் இடம்பெறவுள்ளன.

அதே நேரத்தில், அரசின் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு வரைவோலை, காசோலை மூலமாகவும், சிலர் இணைய வழி எனச் சொல்லப்படும் (Google pay) கூகுள் பே, (Amazon Pay) அமேசான் பே, (Phonepe) போன் பே (Paytm) பேடிஎம் (Mobikwik) மொபிக்விக் உள்ளிட்ட UPI பணப் பரிவர்த்தனை என,  பல்வேறு வகையில் நிதிகள் வருவதால் இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது.  எனினும்,  அனைத்தையும் தொகுத்து,  இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் முழு விவரங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையதளத்தை பராமரித்து வரும் தேசிய தகவல் மையத்துடன் அரசு இணைந்து,  அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேபோல,  10 லட்ச ரூபாய்க்கு மேலாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்,  முதல்வர் சார்பில் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டு, தினசரி நாளிதழ் மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன. அது குறித்த விவரங்களை,  எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,  தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் தொகையாவும், மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதனை பிரத்யேகமாக (PPE KIT) முழு கவச உடைகள், வென்டிலேட்டர், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல், பொது சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில்,  குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள்  பணிக்கு வருவதாலேயே,  இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.