
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து 8 நாட்கள் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (05.03.2021) கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து துணைமுதல்வர் ஓபிஎஸ், பாஜகவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில், ''பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் கவலையோ சந்தோசமோ ஒன்றுமில்லை. ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் எங்களின் இலக்கு வெற்றியாகத்தான் இருக்கும். விரைவில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம்'' என்றார்.