Skip to main content

’’ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புகள் இல்லை’’ - எடப்பாடி பழனிசாமி

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
e e

 

காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று கூறினார்.

 

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடக்க விழா இன்று (மே 12, 2018) நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். விழா முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியது: ’’தமிழகத்தில் வேளாண் தொழில் சிறக்க, தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வழங்கப்படுகிறது.

 

மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது அனைவரும் அறிந்ததுதான். இப்போதைய சூழ்நிலையில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை நீர் திறந்து விட வாய்ப்புகள் இல்லை. இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருக்கும். இதன்மூலம் அணைகள் நிரம்பும்.

 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

சேலம் மாவட்டம் வழியாக அமைக்கப்படும் பசுமை வழிச்சாலை திட்டத்தின் மூலம், பல்வேறு தொழிற்சாலைகள் வரும். வெளிநாடுகளில் இருந்து ஏராளமான முதலீடுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் தொழில் வளம் பெருகும். இந்த
திட்டத்திற்கு அனைவரும் வரவேற்பு அளிக்க வேண்டும்.

 

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.’’

 

young

 

முன்னதாக அவர் ஏற்காடு கோடை விழாவைத் தொடங்கி வைத்து பேசியதாவது: ’’ஏற்காடு கோடை விழாவை இந்த ஆண்டு பசுமை விழாவாகக் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, முதன்முதலாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது. தரைதளத்தில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவதில் இந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

 

ஏற்காட்டில் அடுத்தக் கல்வி ஆண்டு முதல், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி திறக்கப்படும். ஏற்காடு மற்றும் கருமந்துறை ஆகிய மலைப்பகுதிகளில் இரண்டு மினி பேருந்து சேவை தொடங்கப்படும்.
மலைப்பகுதிக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வரும்படி இந்த பேருந்துகள் இயக்கப்படும்.’’


அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்