/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/body.jpg)
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ளது பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சி. இதற்குட்பட்ட சாணார்பாளையம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இங்குள்ளவர்கள் யாராவது இறந்துவிட்டால், சுடுகாடு கொண்டுசென்று அடக்கம் செய்ய அந்த வழியாகச் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையைக் கடந்து சென்று அங்குள்ள மயானத்தில் அடக்க செய்துவருகின்றனர்.
இதற்காக ஓடையின் குறுக்கே இருந்த சிறிய அளவிலான தரைப்பாலத்தைப் பயன்படுத்திவந்தனர். மழைக்காலங்களில் ஓடையில் அடித்துவரப்படும் கழிவுகளும் குப்பைகளும் அந்த தரைப்பாலத்தில் அடைத்துக்கொள்வதால், மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுவந்தது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த தரைப்பாலத்தை அதிகாரிகள் அங்கிருந்து இடித்து அகற்றினார்கள். இதனால் யாராவது இறந்தால், பிணத்தை சுமந்துகொண்டு ஓடையில் செல்லும் தண்ணீரில் இறங்கி மயானத்திற்குச் சென்றுவந்தனர். எனவே மயானத்திற்குப் பிணத்தைக் கொண்டு செல்வதற்கு வசதியாக ஓடையின் குறுக்கே சிறிய அளவிலான பாலமாவது கட்டிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல்தான் உள்ளது.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி சாணார்பாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவி மரகதம் என்பவர் உயிரிழந்தார். அவருடைய உடலை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக வேறு வழியில்லாமல் அவருடைய உறவினர்களும் பொதுமக்களும் சேர்ந்து அந்த ஓடையின் குறுக்கே தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்து, மிகவும் சிரமத்திற்கிடையே பிணத்தைக் கொண்டு சென்று மயானத்தில் புதைத்தனர். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாத சாணார்பாளையத்தில், கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உடனடியாக பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வான செங்கோட்டையன் உட்பட பல அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)