Skip to main content

''நம்பித்தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை'' - கே.என்.நேரு பேச்சு!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

"There is no other way but to believe that they are giving protection" - KN Nehru speech

 

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முஹம்மது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

24 மணி நேரமும் ராணுவ வீரர்கள் காவல் துறையினர் மற்றும் கட்சிகளை சேர்ந்த ஏஜென்ட்கள் அனைவரும் இந்தப் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் தொடர்ந்து ஜமால் முகமது கல்லூரியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருகிறது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்த கார் மற்றும் கண்டெய்னர் லாரியை ஒட்டி தற்போது அனுமதி பெறாமல் கையில் லேப்டாப்போடு நுழைந்த இரண்டு ஒப்பந்தப் பணியாளர்கள் எனத் தொடர்ந்து பல சர்ச்சைகளை இந்த கல்லூரி சந்தித்து வருகிறது.

 

எனவே திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான கே.என்.நேரு இன்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படக்கூடிய கட்டிடத்தில் மேல் தளங்களில் ராணுவப்படை வீரர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் லேப்டாப்புகள் பயன்படுத்துவதால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் ஆனால் அதைச் சரி செய்வோம் என்று கூறியிருந்தார்கள். இதுவரை நடைபெறவில்லை.

 

அதேபோல் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து வாக்கு என்னும் அறைகளுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதற்காக அதைக் கண்காணிக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஒப்பந்ததாரர்கள் இருவர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

ஆனால் அவர்கள் லேப்டாப் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை அதற்கான அனுமதியும் வாங்கவில்லை எனவே இதனை அறிந்த திமுக வேட்பாளர் அனுமதி பெறாமல் எப்படி அவர்கள் லேப்டாப் கொண்டு செல்லலாம் என்று கேள்வி எழுப்பியதோடு ஒப்பந்ததாரர்கள் வருவதாக இருந்தால் அவர்களுக்கு முறையான அனுமதி கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

புகாரைப் பெற்றுக் கொண்ட அலுவலர் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. வேண்டுமென்றால் எங்களிடத்தில் டெமோ வாக்கு இயந்திரம் இருக்கிறது உங்களுடைய ஹேக்கர்ஸ் இருந்தால் கொண்டு வந்து செயல்படுத்திக் காட்டுங்கள் என்று அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.என்.நேரு, ''தொடர்ந்து சர்ச்சைகளை இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நிகழ்வு நேற்று சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்காக வந்த ஒப்பந்ததாரர்கள் அனுமதி இல்லாமல் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்குள் லேப்டாப்போடு சென்றது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தும் அவர்களும் அதைச் சரி செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் லேப்டாப் பயன்படுத்தக்கூடிய இராணுவத்தினரையும் காவல்துறையும் நாங்கள் வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி வந்தோம் சரி செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 

அடிக்கடி சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடக்கின்றன. ட்ரோன் ஒன்று பறந்தது. அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கூறுகிறார்கள். அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். வேறு வழியில்லை'' என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்