publive-image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது உளுந்தாண்டார் கோவில். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் சிவபிரகாஷ். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூமா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். சிவ பிரகாஷ் உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (06.09.2021) முன்னிரவில் சிவபிரகாஷ் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும்வீட்டுக்கு வரவில்லை.

Advertisment

இதனால் சந்தேகமடைந்த தந்தை குப்புசாமி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து, பூமா வீட்டுக்குள் எந்தச் சத்தமும் இல்லை. அமைதியாக இருக்கிறது. சிவபிரகாஷ் வீட்டில் இல்லை. உள்ளே சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் காயங்களுடன் பூமா படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். பூமா கொலை செய்யப்பட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினரும், அவரது உறவினர்களும் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்,உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

டி.எஸ்.பி. மணி மொழியன், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பூமா கொலை செய்யப்பட்டதற்கு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.