ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரமில்லை; 2000 பேருக்கு அபராதம்!!

07:07 PM Nov 12, 2018 | selvakumar

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்காதது தொடர்பாக 1,912 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ. 4.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், ரிஷியூரில் டெங்குகொசு ஒழிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். குடியிருப்பு வீடுகளின் சுற்றுப்புற பகுதிகள் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தபோது, சிமென்ட் தண்ணீர் தொட்டியை டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளருக்கு தலா 2 ஆயிரம் வீதம் அபராதமும், இதேபோல் மற்றொரு வீட்டில் சுற்றுப்புறப் பகுதிகளில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருள்கள் அப்புறப்படுத்தாமல் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் கூறுகையில், ‘’பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையற்ற கலன்களான டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை அப்புறப்படுத்தியும், உபயோகம் இல்லாத கலன்களை நீர் தேங்காமல் கவிழ்த்தும், நீர் சேமிப்புத் தொட்டிகளை கொசு புகாத வண்ணம் நன்றாக மூடியும், வாரத்துக்கு ஒரு முறை நீர் சேமிக்கும் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவி வைக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், தனியார் திரையரங்குகள் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், தூய்மையற்று டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்ததைக் கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு இதுவரை 1912 நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ. 4 லட்சத்து 44 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளை தூய்மையாக பராமரித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார். ஏற்கனவே திருவாரூர் நகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் சுகாதாரமின்மையால், டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த அதிரடியால் மக்களை இருக்கும் இடம் சுகாதாரமாகிவிடும், அரசு இடங்கள், மருத்துவமனை, பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அசுத்தத்திற்கு யார் பொறுப்பேற்பது என்கிறார்கள் பொதுமக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT