
கடத்தல் வகைகளில் இன பேதமில்லை. நானும் சளைத்தவளல்ல என்று நிரூபித்திருக்கிறார் பெண் பணியாளர் ஒருவர். ரேஷன் அரிசி மூட்டைகள் வழக்கம் போன்று பல்வேறு பகுதிகளில் கடத்தப்பட்டு வருவது சகஜமானாலும் சிலதுகள் பிடிபடுகின்றன. பலதுகள் ஜூட் அடித்துவிடுகின்றன.
தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியிலிருக்கும் 02096 முத்துகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் நகரில் பல இயங்குகின்றன. அங்கு பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மூட்டைகள் கடைகளிலிருக்கும். நேற்று இரவு கடைக்கு வந்த அந்த ரேஷன் கடையின் பெண் பணியாளர் ஒருவர் ரேஷன் மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக் கடத்திச் சென்றிருக்கிறார். அது சமயம் அந்தப் பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகையின் பொருட்டு வந்தவர்கள் இந்தக் கடத்தலைச் செல்லில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட அது வைரலானது.

இதையறிந்த பொதுமக்கள் மற்றும் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அதன் நகர தலைவர் அன்னக்கிளி ஷாதிக் தலைமையில் திரண்டனர். பரபரப்பான சூழ்நிலையில் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கும் கடையில் பணியாற்றுகிற ஊழியர்களே இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது. வாட்ஸ் அப்களிலும் வந்துள்ளன. பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய அரிசியினைக் கடத்துவது கடுமையாகக் கண்டிக்கப்படுவதுடன் தொடர்புடையவர்கள் மீது குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். எஸ்.டி.பி.ஐ.யின் நகரத்தலைவரான அன்னக்கிளி ஷாதிக்.
ரேஷன் பொருளைப் பணியாளர் ஒருவரே கடத்திய சம்பவம் கடையநல்லூரை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
Follow Us