
பேசுவதற்கு செல்போன் கொடுக்காததால் தங்கையை அக்காவே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது நாககோனானூர். இக்கிராமத்தில் வசித்து வந்த பழனியம்மாள் என்ற மூதாட்டிக்கு வெங்கடேஸ்வரி, தமிழ்ச்செல்வி என்ற இரு மகள்கள் இருந்தனர். கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் இருக்கிறார். பழனியம்மாளும் அவரது இரண்டு மகள்களும் ஒரே வீட்டில் இருந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல்லில் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்துள்ளார்.
இரண்டு மகள்களில் மூத்த மகளான வெங்கடேஸ்வரி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் பழனியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது 'கோவையில் உள்ள தனது மகனுக்கு போனில் பேச வேண்டும் எனக்கு கொடு' என தங்கையான தமிழ்செல்வியிடம் செல்போனை கேட்டுள்ளார் வெங்கடேஸ்வரி. ஆனால் தமிழ்ச்செல்வி 'செல்போனில் பேலன்ஸ் இல்லை' எனக்கூறி செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேஸ்வரி வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் செல்போன் தராததால் தமிழ்ச்செல்வியைக் கொலை செய்ததாக அம்மாவான பழனியம்மாளிடம் தெரிவித்துள்ளார். 'நீயும் என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்றால் உன்னையும் இதேபோல் கொன்று விடுவேன்'என்றும் மிரட்டியுள்ளார்வெங்கடேஸ்வரி.
இதனையடுத்து வெளியே வந்த பழனியம்மாள், தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மகேஷ், ஆய்வாளர் பாலமுருகன் உயிரிழந்த தமிழ்ச்செல்வி உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கொலையை நிகழ்த்திய வெங்கடேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக மருந்துகள் சாப்பிட்டு வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மருந்து எடுத்துக் கொள்ளாததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)