There is no alternative opinion on the need to raise the banks of the Tamiraparani river Minister E.V.Velu

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு அருகே குரும்பல் என்னும் இடத்தில் உள்ள பாலம் மழைநீர் வெள்ளதால், உடைந்து விட்டது. இப்பாலத்தையும், வெள்ளதால் சேதமடைந்த குடிசை வீடுகளையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுப்ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உடன் சென்று இன்று (25.12.2023), ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொதுப்ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வரலாறு காணாத பெய்த மழையினால், நாகர்கோவிலில் 5, விருதுநகரில் 13, தென்காசியில் 13, தூத்துக்குடியில் 113 மற்றும் திருநெல்வேலியில் 44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கின்ற தரைப்பாலம் உடைந்து விட்ட காரணத்தினால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கீரிட் சாலை போடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1127 தரைப்பாலங்கள்எல்லாம் உயர்மட்டப் பாலங்களாக கட்டிவருகிறோம். இதில்,இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்டப்பாலமாக கட்ட ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

Advertisment

There is no alternative opinion on the need to raise the banks of the Tamiraparani river Minister E.V.Velu

தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவது என்பது இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்த நான்கு மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளேன். மாஞ்சோலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன், சாலை அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.