
விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை சின்னத்தையும் ஒதுக்கியது. இதை வரவேற்கும் விதமாக கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிதம்பரத்தில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில், “இந்த அங்கீகாரம் சிதம்பரம் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் பெற்ற வெற்றி தான். இது திமுகவின் பேர ஆதரவோடு கிடைத்த அங்கீகாரம். திக்கு முக்கு தெரியாத காலத்தில் எந்த திசை வழியாக பயணிப்பது என்ற நிலையில் ஐயா மூப்பனாரின் ஆசியோடு இந்த தொகுதியில் காலடி எடுத்து வைத்தோம். அதனால் பல வன்முறைகளை எதிர்கொண்டோம், ரத்தம் சிந்தினோம். அரசியல் வரலாற்றில் எந்த தொகுதியிலும் நடந்திடாத தேர்தல் வன்முறை வெறியாட்டங்கள் சிதம்பரம் தொகுதியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் ஆறு முறை தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளோம், இது தலித் மக்கள் மட்டும் அளித்த வாக்குகள் அல்ல, ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து திருமாவளவனுக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளோம்.

விஜயகாந்த், விஜய் உள்ளிட்டவர்கள் கட்சி தொடங்கினால் தமிழகம் முழுவதும் கிளைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் திருமாவளவன் கட்சி தொடங்கினால் தலித் அல்லாதவர்கள் நம்மை எதிராக பார்க்கும் உளவியல் இருந்தது. இது இந்த தொகுதிக்கு மட்டுமல்ல இந்திய அளவிலும் இருந்தது. இதற்கு காரணம் சனாதன கட்டமைப்பு தான். இந்த சனாதன கட்டமைப்பை அகற்றுவதற்காக தான் தொடர்ந்து களமாடி போராடி வருகிறோம். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையை பெற்று இன்று அங்கீகாரத்தை பெற்றுள்ளோம்.
2026 தேர்தலில் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் வருவார். அதைவிட அதிமுக கூட்டணியில் கொள்ளை புற வழியாக அவர்கள் தோளில் சவாரி செய்து இந்த மண்ணில் மதவெறி அரசியலை வளர்த்திருப்பதற்காக யுக்திகளை வகுக்கும் பாரதிய ஜனதா போன்ற சனாதன சக்திகளை வலுப்பெறுவதைத் தடுத்த வேண்டும். மேலும் அதனை வீழ்த்த வேண்டிய, தடுக்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது. இந்த மண்ணில் பாரதிய ஜனதா அணி தோற்றது என்று வரலாறு எழுதும்போது அதில் சிறுதைகளின் பங்கு உள்ளது என்பதை வரலாறு பதிவு செய்ய வேண்டும்.
கூட்டணியில் இணையும் கட்சிகளை நீர்த்துப் போக செய்கிற யுக்திகளை பாஜக செய்து வருகிறது. அதிமுகவை கரைய வைத்து அபகரித்து விடும். அதிமுகவின் வாக்கு வங்கியை பெற்றுவிட்டு வெற்றி பெற்ற பின் இது எங்க வாக்கு வங்கி என பின்னுக்குத் தள்ளுகிற வேலையை பாரதிய ஜனதா கண்டிப்பாக நடத்தும். அம்மையார் ஜெயலலிதா பாஜக குறித்து, ‘மோடிய.. இந்த லேடியா... என மோதி பார்ப்போம்’ என தைரியமாக பேசி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். அவர்களின் வழி தோன்றல்களில் வந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை காவு வாங்க தயாராக இருக்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாமா? அதற்கு இடம் கொடுக்கலாமா?
திருச்சியில் வரும் 31ஆம் தேதி மதச்சார்பின்மையை காப்போம் என மக்கள் எழுச்சி பேரணி நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பேர் அம்பேத்கர் போன்று நீல சட்டை கோட் சூட் சிவப்பு டை அணிந்து கொண்டு பங்கேற்க வேண்டும். திருச்சியை திரும்பிப் பார்க்கும்போது அம்பேத்கர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து சென்றார்கள் என்ற வரலாற்று பதிவு இருக்க வேண்டும். அதில் நானும் கோட் சூட்டுடன் கலந்து கொள்வேன். இந்து மக்கள் நல்லவர்கள். ஆனால் இந்துத்துவா பேசும் ஆர்.எஸ்.எஸ். பாஜக இந்துக்களுக்கே ஆபத்தானவர்கள். நாம் எதிர்ப்பது இந்துக்களை அல்ல, இந்துத்துவ நச்சு அரசிலை பேசும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் -ஐ தான் அவர்களின் மக்கள் விரோத அரசியலை எதிர்க்கிறோம்” என்று பேசினார்
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வேளாண் மற்றும் உலக நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “திருமாவளவன் ஒரு போராளி. சாதியை சொல்லி வாக்கு கேட்ட காலம் போய் தற்போது கொள்கையை கூறி வாக்கு கேட்கும் காலம் மாறி வருகிறது அதற்கு சான்று தான் இந்த அங்கீகாரம் மாநாடு. தேர்தலுக்கு 10 நாளுக்கு முன்பு நான் தான் பானை சின்னத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது தான் உங்கள் வெற்றி சின்னம் என கூறினேன். அவர்கள் யோசித்தார்கள். அப்போது பானை பிடித்த கை பாக்கியசாலி என கூறினேன். இன்று தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவராலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நாடே திரும்பிப் பார்க்கிறது” என்று பேசினார்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ கணேசன், “72 ஆண்டுக்கால வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் தலித் ஒருவரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது இதுவே முதல் முறை. தேர்தல் அரசியல் களத்தில் 25 ஆண்டு காலமாக தொடர் களமாடி இந்த சாதனையை திருமாவளவன் பெற்றுள்ளார். தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் தலித் மக்களின் தனிப்பெரும் தலைவராக திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சரின் நம்பிக்கையை பெற்ற தலைவராகவும் உள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராகவும் திருமாவளவன் உள்ளார்” என்ன பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி, “இந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் ஆரம்பத்திலிருந்து இதுதான் நமது கூட்டணி என்று சொல்கிறோம். எதையாவது சொல்லி நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவுமில்லை என்று கூறிய அதிமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது. எப்படி கூட்டணி வைத்துக் கொண்டார்கள்? திருமாவளவன் தனிமனித விருப்பு வெறுப்பு இல்லாமல் கொள்கையின்பால் நின்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இதற்கு வாழ்த்துக்கள்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன், “இன்று மதவெறி அரசியலுக்கு சிலர் காவடி தூக்குகிறார்கள். ஆனால் சாதிவெறி மதவெறி ஒழிப்புக்கு இடதுசாரிகளுடன் திருமாவளவன் இணைந்து களமாடி பயணிக்கிறார். திருமாவளவன் ஜாதியை பாசிச மதத்தை ஒழிப்பதிலும் உறுதியான நம்பிக்கையுடன் நிலைப்பாட்டைக் கொண்டு செயல்படுகிறார். பாசிச சக்திகளை வீழ்த்தும் போராட்டத்தில் இடதுசாரிகளும் இணைந்து களம் காணுவோம்” என்று பேசினார்
இதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகி கண்ணன், மதிமுக மாநில பொருளாளர் செந்திலதிபன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிவாசகம், தமிழ்நாடு ஜமாத் உலாமா சபை தலைவர் ஹாஜாமுகைதீன் பாகவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்