Theni dt Chinnamanur area ADMK city secretary Pichaikani house incident

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி. இவர் தனது வீட்டிலேயே கட்சி அலுவலகத்தையும் நடத்தி வருகிறார். முன்னதாக அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சூழலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு, தேனி நகர அதிமுக செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாகப் பிச்சைக்கனி தரப்பு மற்றும் மற்றொரு தரப்புக்கு இடையே உட்கட்சி பூசல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் இந்த இருதரப்பிற்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 15ஆம் தேதி அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கம்பத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது இரு தரப்பினரிடையே சிறு தகராறு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் பிச்சைக்கனி வீட்டில் நேற்று (23.09.2024) நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த புகார் குறித்து விசாரிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்துத் தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.