ADVERTISEMENT

ஆட்டோவைப் பறிமுதல் செய்த போலீசார்! நடந்தே வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண்கள்!

11:57 AM Apr 25, 2020 | rajavel


தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற நேரங்களில் வெளியில் வரக்கூடாது என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் பல்வேறு பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்வதற்குக் காவல் துறையினர் தங்கள் சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனம் மூலம் உதவி செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT


அப்படி இருக்கையில் தேனி மாவட்டம் போடியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது தாயாருடன் சென்ற ஆட்டோவை வழிமறித்து, அவர்களை கீழே இறக்கி விட்டதோடு அவர்கள் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணான கார்த்திகாவையும், அவரது தாயாரையும் நடந்தே மருத்துவமனைக்குச் செல்ல வைத்த அவலம் நடந்தேறி உள்ளது.

ADVERTISEMENT

இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் துறை நிர்வாகம் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் மன ரீதியாக மருத்துவ ஆலோசானை பெற்று பணிக்கு வர வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் போடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அபர்ணா, நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ளார். இவர் அவ்வப்போது போடி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஒரு ஆட்டோவை அழைத்து அவர் மற்றும் தனது தாயுடன் பரிசோதனை செய்வதற்காகப் போடி அரசு மருத்துவ மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் சென்ற ஆட்டோ, போடி மார்க்கெட் பகுதியில் வந்தபோது அங்குக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோ டிரைவரிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆட்டோவைப் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அதில் வந்த கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது தாயாரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகப் போலீசார் கூறினார்கள்.

அதற்காக அவர்கள் காத்திருந்தனர். ஆனால் இரண்டு மணி நேரமாகியும் அவர்கள் அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவருடைய தாயாரும் தாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போடி அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றனர்.

பின்னர் மருத்துவமனை சோதனைப் பரிசோதனை முடித்து அவரும் அவரது தாயாரும் நடந்தே அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றனர். இப்படிக் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சைக்காக ஆட்டோவில் சென்றவர்களைப் போலீசார் தடுத்து நடக்கவிட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT