
தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார் என தலைமை அறிவித்தது. அதைக் கண்டு தேனி மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணிக் கட்சியினரும் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் களமிறங்க உள்ள தங்க தமிழ்ச் செல்வன் தனக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற நேற்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உட்பட சில நிர்வாகிகளுடன் சென்னை சென்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க திண்டுக்கல் சென்றார். ஆனால் திண்டுக்கல்லில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் அங்கே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. அங்கே அமைச்சர் சக்கரபாணி உட்பட கட்சி பொறுப்பாளருடன் வேட்பாளர்களும் இருந்தனர்.
அப்போது திடீரென தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் மேடைக்கு வந்தார். மேடையில் இருந்த அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணிக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் சக்கரபாணியும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வேஷ்டி அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சசிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உட்பட கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.