Advertisment

முதுபெரும் கவிஞர் ஆலந்துர் மோகனரங்கன் மறைவு

முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன், உடல்நலக் குறைவால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராய் மருத்துவமனையில் அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

Advertisment

m

சிறந்த தமிழ்க்கவிஞரான இவர் 1942 ஜூன் 1-ல் பிறந்தவர். அவருடைய தந்தை கோபால், தாயார் கோ. மீனாம்பாள் ஆவார்கள். நூலகராக வாழ்க்கையைத் தொடங்கி, செழுந்தமிழ்க் கவிஞராக, பாடலாசிரியராக, சிறுகதையாளராக, புதினப் படைப்பாளராகத் திகழ்ந்தவர். சுரதாவைப் போல் மரபுக் கவிதைகளை புதுமை நுட்பத்தோடு எழுதியவர். இளைஞர்களுக்கு நிகராய்ப் புதுக் கவிதைகளையும் ஹைகூ கவிதைகளையும் எழுதி வியப்பூட்டியவர். ஓயாது எழுதியும் படித்தும் தன் பொழுதுகளைச் சுறுசுறுப்பாகவே வைத்திருந்த இலக்கிய உழைப்பாளி அவர்.

Advertisment

அண்மையில் ‘நூலகத்தால் உயர்ந்தேன்’ என்ற நூலில், தான் சந்தித்துப் பழகிய, கேட்டறிந்த ஏறத்தாழ 2,500 படைப்பாளர்களைப் பற்றி சிறப்பாகப் பதிவு செய்திருந்தார் மோகனரங்கன்.

‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்ற தலைப்பில் இவர் எழுதிய மு.வ.வின் வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.

எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூலும் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. அவருக்கு வசந்தா என்ற மனைவியும், முனைவர் பாட்டழகன், கவிமணி, கலைவாணன், தேன்மொழி, அன்புமலர், வெற்றியரசி ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் பாட்டழகன், வெற்றியரசி தவிர மற்றவர்கள் மருத்துவர்களாக இருக்கின்றனர்.

மோகனரங்கனின் உடல், ’ 26, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600081’ என்ற முகவரியில் உள்ள அவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் பெருமக்களும் இலக்கியவாதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புக்கு:

முனைவர் பாட்டழகன்

93804 17307,

9952914947

death lyricist
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe