Skip to main content

முதுபெரும் கவிஞர் ஆலந்துர் மோகனரங்கன் மறைவு

Published on 04/10/2019 | Edited on 04/10/2019


 முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன், உடல்நலக் குறைவால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராய் மருத்துவமனையில் அதிகாலை 2.30  மணியளவில் இயற்கை எய்தினார்.  

m

சிறந்த தமிழ்க்கவிஞரான இவர்  1942 ஜூன் 1-ல் பிறந்தவர்.  அவருடைய தந்தை கோபால், தாயார் கோ. மீனாம்பாள் ஆவார்கள். நூலகராக வாழ்க்கையைத் தொடங்கி, செழுந்தமிழ்க் கவிஞராக, பாடலாசிரியராக, சிறுகதையாளராக, புதினப் படைப்பாளராகத் திகழ்ந்தவர். சுரதாவைப் போல் மரபுக் கவிதைகளை புதுமை நுட்பத்தோடு எழுதியவர். இளைஞர்களுக்கு நிகராய்ப் புதுக் கவிதைகளையும் ஹைகூ கவிதைகளையும் எழுதி வியப்பூட்டியவர். ஓயாது எழுதியும் படித்தும் தன் பொழுதுகளைச் சுறுசுறுப்பாகவே வைத்திருந்த இலக்கிய உழைப்பாளி அவர்.


அண்மையில் ‘நூலகத்தால் உயர்ந்தேன்’ என்ற நூலில், தான் சந்தித்துப் பழகிய, கேட்டறிந்த ஏறத்தாழ 2,500 படைப்பாளர்களைப் பற்றி சிறப்பாகப் பதிவு செய்திருந்தார் மோகனரங்கன்.  


‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்ற தலைப்பில்  இவர் எழுதிய மு.வ.வின் வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.


எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூலும் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. அவருக்கு வசந்தா என்ற மனைவியும், முனைவர் பாட்டழகன், கவிமணி,  கலைவாணன், தேன்மொழி, அன்புமலர், வெற்றியரசி ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் பாட்டழகன், வெற்றியரசி தவிர மற்றவர்கள் மருத்துவர்களாக இருக்கின்றனர்.


மோகனரங்கனின் உடல்,  ’ 26, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600081’ என்ற முகவரியில் உள்ள அவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் பெருமக்களும் இலக்கியவாதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்புக்கு:
முனைவர் பாட்டழகன்
93804 17307,  
9952914947
 

சார்ந்த செய்திகள்

Next Story

உதயநிதி அந்த படத்தில் நடிக்கிறாருன்னே தெரியாது - பாடலாசிரியர்  விக்னேஷ்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 Vignesh Lyricyst Interview

 

தன்னுடைய திரையுலக அனுபவங்களை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

வாலி சாரின் பாடல்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கும். கடைசிவரை தன்னை அப்டேட்டாக வைத்திருந்தவர் வாலி சார். நாமும் அவுட்டேட்டாக  ஆகிவிடக் கூடாது என்கிற பயத்தை எனக்கு ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் அவர். மிஸ்ஸி சிப்பி பாடலை வாலி சார் எழுதியது ஆச்சரியம். யாரும் முகம் சுளிக்காத வகையில் கிளாமரான அந்தப் பாடலை அவர் எழுதியிருப்பார். எனக்கு அவர் எழுதியதில் மிகவும் பிடித்த இன்னொரு பாடல் முக்காலா முக்காபுலா. எப்படி அதுபோன்ற வார்த்தைகளைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும்.

 

முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என்னோடு படித்த பெண்கள் கூட அவற்றைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ஆல்பம் பாட்டுக்காக என்னைப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் நான் எழுதிய முதல் பாடல். அவருக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். அதன்பிறகு பலருடன் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். கண்ணை வீசி பாடலில் நான் நினைத்த வரிகளை விட எதிர்பார்க்காத வரிகளுக்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது. நான் அதிகம் எதிர்பார்த்த சில பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 

 

அடிபொலி பாடல் எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது. கண்ணை நம்பாதே படத்துக்குப் பாடல் எழுதும்போது அது உதயநிதி ஸ்டாலின் சார் நடித்த படம் என்பதே எனக்குத் தெரியாது. அதனால் பொதுவான ஒரு பாடலாகத் தான் அதை எழுதினேன். அதன் பிறகு உதயநிதி சாரின் படத்துக்காகத் தான் அந்தப் பாடல் என்று தெரிந்தவுடன் சர்ப்ரைஸாக இருந்தது. தமிழ் இலக்கியங்களில் நாம் இன்னும் சினிமாவில் பயன்படுத்தாத வார்த்தைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறேன். அது புதுமையையும் தருகிறது.


 

Next Story

விக்ரம் பட பிரபலம் மீது இளம்பெண் கொடுத்த புகார் - காவல் நிலையத்தில் விசாரணை

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

vishnu edavan case Transfer to other police station

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களிலும் இணை இயக்குநராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன். மேலும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தில் 'பொளக்கட்டும் பற பற', விக்ரம் படத்தில் 'போர் கண்ட சிங்கம்', 'நாயகன் மீண்டும்' உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

 

இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்து கர்ப்பமானதை தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறி சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் விஷ்ணு இடவனும் காதலித்து வந்துள்ளதாகவும் அப்போது அந்த பெண் கர்ப்பமான நிலையில் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால், திருமணத்திற்கு விஷ்ணு இடவன் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் விஷ்ணு இடவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இருதரப்பிலும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.