/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/robbery-in_2.jpg)
விழுப்புரம் நகரில் உள்ளது கே.கே நகர். இந்த நகரின் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவி லட்சுமியும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதுண்டு.
அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இவரது நண்பரிடம் தனது வீட்டு சாவியை கொடுத்து அவ்வப்போது வீட்டினை வந்து பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு தனது மகன் வசிக்கும் பெங்களூருக்கு சென்றுவிட்டனர். அவரது நண்பர் வாரம் ஒரு முறை டாக்டர் வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊத்திவிட்டு செல்வாராம், அதன்படி நேற்று டாக்டர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்துள்ளார்.
அப்போது அந்த வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் உடனடியாக பெங்களூரில் உள்ள அவரது நண்பர் டாக்டர் ராமசேதுவை தொடர்புகொண்டு தகவலை கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரினையடுத்து விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி நல்லசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அதில், ராமசேது அடிக்கடி வெளியூர் சென்று வருவதும் இதனால் பல நாட்கள் அவர் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் எந்தவித பயமுமின்றி மிகவும் துணிவோடு அந்த வீட்டில் புகுந்து கொள்ளை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள 2 அறைகளில் இருந்த பீரோக்களின் பூட்டை உடைத்து திறந்துள்ளனர். அதில் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லாததால் அதை அலங்கோலமாக கலைத்து போட்டுவிட்டு படுக்கை அறையின்கட்டிலின் கீழ்ப்பகுதியில் தரையில் புதைக்கப்பட்டு இருந்த லாக்கரை கண்டுபிடித்துள்ளனர். அதனை உடைத்து அதில் இருந்த 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது புதிய பேருந்து நிலையம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் வரை சென்றது சாய்னா. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை கொள்ளைப்போன நகையின் மதிப்பு 18 லட்சம் என்று கூறப்படுகிறது கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)