Theft tasmac thieves arrested

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது சாரம் கிராமம். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, இந்த ஊரில் இருந்து ஈச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 13ஆம் தேதி இரவு விற்பனையை முடித்துவிட்டு கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, விற்பனையாளர் பழனிவேல், உதவியாளர் தாஸ் ஆகிய 3 பேரும் கடையை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 14 அட்டைப் பெட்டிகளில் இருந்த 672 மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதுதொடர்பான புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மது பாட்டில்களை கொள்ளை அடித்தவர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையின்போது சாரம் கிராமத்தின் சுடுகாட்டுப் பகுதியில் சந்தேகப்படும்படி சென்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் மேல் பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும்அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், சாரம் டாஸ்மாக் கடையில் சுவரில் ஓட்டையிட்டு மது பாட்டில்களைத்திருடியதை ஒப்புக்கொண்டனர்.

Advertisment

இவர்களுக்கு உதவியாக நண்பர் ஒருவரும் ஈடுபட்டுள்ளார். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். களவாடப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50,000 என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் சுவரில் துளையிட்டு கொள்ளை அடிப்பதும், விற்பனையாளர்கள் பணி முடித்து விற்பனையான பணத்தை எடுத்துச் செல்லும்போது, அவர்கள் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி, அரிவாளைக் காட்டி மிரட்டி, பணியாதவர்களை அரிவாளால் வெட்டியும்,அவர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவங்கள் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் நடந்துள்ளன என்பதும் அதில் சம்பந்தப்பட்ட சிலரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.