
சேலத்தில், மளிகை வியாபாரியை சரமாரியாக தாக்கி, கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டு பீரோவில் இருந்த 50 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச்சென்ற வடமாநில ஊழியர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டை தெய்வநாயகம் தெருவைச் சேர்ந்தவர் மோகன்குமார் (30). ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர். இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் மளிகை மொத்த வியாபார நிறுவனம் நடத்திவருகிறார். முதல் தளத்தில் அவர் குடும்பத்துடன் வசிக்கிறார். வீட்டின் இரண்டாம் தளத்தில் அவரிடம் வேலை செய்துவரும் நான்கு ஊழியர்கள் தங்கியுள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தன் மனைவி, குழந்தைகளை முன்கூட்டியே சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவிட்டார். கடை ஊழியர்களில் மூன்று பேரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதையடுத்து ஓம்பிரகாஷ் என்ற ஊழியர் மட்டும் மோகன்குமாருடன் தங்கியிருந்தார்.
கடந்த 19ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஓம்பிரகாஷ், அவருடைய கூட்டாளிகள் 2 பேரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். தனியாக இருந்த மோகன்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் கை, கால்களை கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டு பீரோவில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தைப் பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். தப்பிச் செல்லும்போது வீட்டின் வெளிப்புற கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் இருந்து மோகன்குமார் தன்னைக் காப்பாற்றுமாறு கத்தினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பூட்டை உடைத்து, மோகன்குமாரை மீட்டனர். அப்போது அவர், நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, ஓம்பிரகாஷும் கூட்டாளிகளும் பணத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்செல்வது உறுதியானது. கொள்ளையர்கள் ராஜஸ்தானுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொள்ளையர்களைத் தேடி ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.