/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4600.jpg)
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெருவைச்சேர்ந்த சீதாராமன் என்பவரின் மனைவி கமலா(75). இவருக்கு, மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனி குடும்பமாக வசித்து வருகிறார்கள். மகள் சித்ரா மட்டும் தாய் கமலாவுடன் வசித்து வந்துள்ளார். கமலா அங்கு இருக்கும் முருகன் கோயிலை தினமும் சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வருவதாக தாய் கமலாவிடம் கூறிவிட்டு மகள் சித்ரா சென்னை சென்றுள்ளார்.
வீட்டில் கமலா மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கோவிலுக்குச் சென்று சுத்தம் செய்துவிட்டுவீடு திரும்பினார். அப்போது அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் கமலா வீட்டிற்குள் சென்றதும் அவரைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று, தயாராக துணியில் வைத்திருந்த மயக்க மருந்தை கமலாவின் முகத்தில் வைத்து அழுத்தி உள்ளார். இதனால், கமலா மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். பிறகு அந்த மர்ம நபர், கமலா அணிந்திருந்த 18 பவுன் நகையை பறித்துக் கொண்டதோடு, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த கமலா, நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்தான் மேற்சொன்ன விஷயங்கள் தெரியவந்தது.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிப்பதற்காக டி.எஸ்.பி. ரூபன் தலைமையில் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.கொள்ளை அடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு சுமார் 8 லட்சம் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)