Advertisment

பிணையில் வெளியேவந்து.. தாய், மகளை கொலை செய்த திருடன்..!

Theft case police arrest recover two gram gold

Advertisment

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்களின் மூத்த மகள் ஜீவஜோதி, திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.விஜயலட்சுமி, தன்இரண்டாவது மகள் மாதவி என்கிற சந்தியாவுடன்வசித்து வந்தார். இவர்களுக்குச் சொந்தமான நிலம் புதுச்சேரி அருகே கடலூர் மாவட்டம், சிங்கிரிகுடிக்கு உட்பட்ட இடையார்பாளையம் பகுதியில் உள்ளது.

கடந்த 1ஆம் தேதி விஜயலட்சுமியும் சந்தியாவும் அவர்களது விவசாய நிலத்திற்கு அருகே படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரின் சடலத்தைப் பார்த்து, ரெட்டிச்சாவடி போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பார்வையிட்டதுடன், ஏ.டி.எஸ்.பி பாண்டியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்த இரட்டைக் கொலை சம்பந்தமாக நேற்று (03.03.2021) புதுச்சேரி மாநிலம், நயினார் மண்டபம் பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி இருசப்பன் (49) என்பவரை டெல்டா போலீசார் கைது செய்து, பின்னர் ரெட்டிச்சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், "விஜயலட்சுமி நிலத்திற்கு அருகில் தென்னந்தோப்பில் இளநீர் குத்தகைக்கு எடுத்துள்ளேன். இளநீர் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லை. அதனால் நகை திருட்டில் ஈடுபட முடிவு செய்தேன். இந்த சூழ்நிலையில், நிலத்தைப் பார்வையிட விஜயலட்சுமியும், அவரது மகளும்அடிக்கடி வருவார்கள். அவர்கள் நகை அணிந்து இருந்ததால்அபகரிக்க முடிவு செய்து, அதன்படி விஜயலட்சுமி, அவரது மகள் சந்தியா இருவருடனும் பழகி வந்தேன். சம்பவத்தன்று விஜயலட்சுமி நிலத்திற்கு வந்தபோது, அவரது கழுத்தில் இருந்த நகையைப் பறித்தபோது அவர் சத்தம் போட்டதால், கத்தியால் வெட்டிக் கொலை செய்தேன். தொடர்ந்து அங்கு வந்த சந்தியாவையும் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

Advertisment

அதையடுத்து இருசப்பனை கைது செய்த போலீசார், கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இருசப்பன் ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, நகை திருடிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூலம் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த இருசப்பன், இளநீர் வியாபாரம் செய்து வந்ததுடன், நகை திருட்டிலும் ஈடுபட்டுள்ளார்.

போலீசாரின் பிடியில் இருசப்பன் சிக்கியதையடுத்து, அவரிடமிருந்து கொலை செய்வதற்குப் பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட தாய், மகளின் நகைகள் குறித்து விசாரித்தபோது, ஆற்றங்கரையோரம் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அங்குசென்று நகையைக் கைப்பற்றி சோதனை செய்ததில் 2 கிராம் மட்டுமே தங்கநகை என்பதும் மற்ற நகைகள் கவரிங் என்பதும் தெரியவந்தது.

Cuddalore Theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe