/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3106.jpg)
சேலம் அருகே, 9 டன் எடையுள்ள செல்போன் டவரையே சல்லி சல்லியாக பிரித்து கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த டவரை பாதுகாக்க, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், காவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து, பாதுகாவலரிடம் சில ஆவணங்களைக் காண்பித்து, இந்த செல்போன் டவர் பழுதடைந்துள்ளது. அதை பழுதுநீக்கம் செய்ய வசதியாக டவரை கழற்றி வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு மர்ம நபர்கள், அந்த செல்போன் டவரை ராட்சத கிரேன் மூலம் சல்லி சல்லியாக கழற்றி, கடத்திச் சென்று விட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3408.jpg)
இந்த நிலையில், செல்போன் டவர் நிறுவிய உண்மையான நிறுவனத்தின் ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிக்கு வந்துள்ளனர். அங்கு செல்போன் டவர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, மர்ம நபர்கள் ஒரு டவரையே கழற்றி கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேலத்தில் பணியாற்றி வரும் செல்போன் நிறுவன மேலாளர் தமிழரசன், வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தன்று செல்போன் டவர் அமைந்திருந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட செல்போன் டவரும், தற்போது பயன்பாடற்று இருப்பது தெரிய வந்துள்ளது. சேலத்தில் கைவரிசை காட்டிய கும்பல், தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களிலும் இதேபோல் செல்போன் டவர்களை குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர்.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த நாகமுத்து (35), தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சண்முகம் (33), வாழப்பாடியை காமராஜர் நகரைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா (38), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 6.46 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 டன் எடையுள்ள செல்போன் டவரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட இரும்பு பட்டைகள், இரும்பு உருளைகள், ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)