
சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதாக கூறி அரசு ஊழியரை ஏமாற்றி ரூ. 86 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பாலன். இவர் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கிய நிலையில், அதை ஆக்டிவேட் செய்யத் தெரியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து விசாரிக்கையில் மர்ம நபர் ஒருவர், உங்களது புதிய சிம் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றால் நாங்கள் அனுப்பும் லிங்க்கிற்கு பத்து ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாலனும் அவ்வாறே செய்துள்ளார். இந்நிலையில், உடனடியாக அவரது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து 86,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலன், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதாகக் கூறி ஏமாற்றி வங்கிக் கணக்கிலிருந்து 86 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.