சென்னையில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் 975 மதுபானப் பெட்டிகளை ஏற்றிய லாரி, சிவகங்கைக்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளது. திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் தேநீர் அருந்தச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் வந்து லாரியை பார்வையிட்ட போது லாரியில் வைத்திருந்த இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 36 மதுபானப் பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் செல்வம் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.