Skip to main content

தியேட்டர்கள் திறக்கப்பட்டது; படம்தான் ஓடவில்லை!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Theaters opened but the movie just didn’t run!

 

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சென்ற  மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அரசு அலுவலகம் முதல் தனியார் நிறுவனம், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, மக்களின் வாழ்வியல் நிலையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இதன்படி, சென்ற மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேலும் சில தளர்வுகள் அறிவித்தார்.
 

அதில் தியேட்டர்கள், அருங்காட்சியங்களை நவம்பர், 10ஆம் தேதி முதல் திறந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. அதன்பேரில், 10ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 35 தியேட்டர்கள் திறக்கப்பட்டது. ஆனால், புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் வெளியிடாததால், தியேட்டர்களில் எந்தக் காட்சியும் திரையிடப்படவில்லை. இதில், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே அபிராமி, தேவி அபிராமி தியேட்டர் திறக்கப்பட்டு, மாடுகளை வைத்து கோமாதா பூஜை செய்யப்பட்டது. இதில், தியேட்டர் உரிமையாளர் செந்தில் உள்ளிட்ட தியேட்டர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் செந்தில் கூறும்போது, "சென்ற 8 மாதங்களுக்குப் பிறகு, தியேட்டர்களை திறந்துகொள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை வரவேற்று, தியேட்டர்களை சுத்தப்படுத்தி தயார்படுத்தினோம். ஆனால், புதிய திரைப்படங்கள் எதையும் தயாரிப்பாளர்கள் வெளியிடாததால் ரசிகர்கள் வருகை இருக்காது. ஆகவே, எங்களால் தியேட்டர்களை இயக்க முடியவில்லை. 10ஆம் தேதி தியேட்டர்களை திறந்து, எங்களது முறைப்படி கோமாதா பூஜை செய்து, வழிபாடு நடத்தினோம். ஆனால், அனைத்துக் காட்சியும் ரத்து செய்துவிட்டோம். எங்களது தியேட்டர்கள் சங்க தலைமை நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே தியேட்டர்களை இயக்குவோம்" என்றார். 

 

திரையில் படம் பார்த்து பல மாதங்களாகி விட்டது. இன்றாவது பார்க்கலாம் என தியேட்டருக்கு வந்த சில ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்