Theater training in schools and colleges! Actor Chandrasekhar recommended

அரசுப்பள்ளி, கல்லூரிகளில் நாடகக்கலை, நாட்டுப்புறக் கலைகளுக்கென தனி வகுப்பு நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.

Advertisment

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில்சேலம், கோவை மண்டல இயல், இசை, நாடக கலைஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 3) நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) செந்தில்குமார், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisment

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 80 கலைஞர்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.

இதையடுத்து நடிகர் வாகை சந்திரசேகர் ஊடகங்களிடம் கூறியதாவது: கலை பண்பாட்டுத்துறை சார்பில் இயல், இசை, நாடக, நாட்டுப்புற கலைஞர்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதி, ஆடை ஆபரணங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இதை மண்டல வாரியாக கலைஞர்களுக்கு வழங்குவதோடு, அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சியை கலையின் முன்னேற்றத்தைக் கொண்டே கேட்டறிந்து கொள்ள முடியும். இதனால் கலையை வளர்த்திட நலவாரியம் அமைக்கப்பட்டு, கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நல உதவி வழங்கப்படுகிறது.

Advertisment

கலைஞர் ஆட்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளாக பல திட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருகிறோம். மாநிலம் முழுவதும் 6 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். ஆனால் 48 ஆயிரம் பேர் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்க பதிவுகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது.

அரசுப்பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புற, நாடகக் கலைகளைப் பயிற்றுவிக்க தனி வகுப்பு நடத்த வேண்டும் என்பதை முதல்வருக்கு பரிந்துரைக்க உள்ளோம். மாணவர்களிடம் கலையை வளர்த்தால்தான் நாட்டுப்புறக் கலைகள் தொடர்ந்து வளர்ந்து வரும். பேருந்துகளில் பயணிகளைப் பாதிக்காத வகையில் இசைக்கருவிகளைக் கொண்டு செல்ல அனுமதிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு வாகை சந்திரசேகர் கூறினார்.