
'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.
அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.
இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.
ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.