Skip to main content

‘பொற்கால ஆட்சியின் இழிநிலை!!!விளம்பரம் தேடும்  ‘கல்நெஞ்சு’ கலெக்டர்!’-சவால்விடும் தாசில்தார்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்றொரு பழமொழி உண்டு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தனி வட்டாட்சியர் இரா.ராமநாதன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்தை, தீபாவளி வாழ்த்து என்ற பெயரில் வாட்ஸ்-ஆப்பில் தீயான வார்த்தைகளால் சுட்டெரித்திருப்பது, அந்த வகைதான்!

thasildhar's whatsapp message


இத்தனைக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில் அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டம், மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு தேர்வானதால், ’மாற்றத்தின் வெற்றியாளர் – 2018’ விருதினை, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாடுவிடமிருந்து பெற்றவர்.  அதன் காரணமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் வாழ்த்தினைப் பெற்றவர் ஆவார்.  

தேசிய அளவில் ‘கீர்த்தி’ பெற்றவராகத் திகழும் ஆட்சியர் சிவஞானத்தை, தாசில்தார் ஒருவர் பொதுத்தளத்தில் வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார் என்றால், அவருடைய வலி எத்தனை கொடுமையானதாக இருக்கும்? தாசில்தார் இரா.ராமநாதனின் சீற்றம் இது.

‘மதிப்பிற்குரிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தங்களது விருதுநகர் யூனிட் அகல இரயில் பாதை இரட்டிப்புத் திட்டத்தில் தனி வட்டாட்சியராகப் பணி புரிந்து வரும் இரா.இராமநாதன் தீபாவளி வாழ்த்துக்களை (எங்களுக்கு ஏது தீபாவளி?) வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் இந்த மாவட்டத்தில் ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காவது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் அரசிடமிருந்து நிதியினைப் பெற்று தங்களுடைய மாதாந்திர ஊதியம், வருடாந்திர ஊதிய உயர்வு , சரண் விடுப்பு ஊதியம் , அக விலைப்படி நிலுவை, பயணப்படி, ஊதிய நிர்ணயக்குழுவின் நிலுவை அனைத்தையும் பாக்கி ஏதும் ஒன்றும் விடாமல் பெற்று தங்களது குடும்ப வாழ்வாதரத்தை எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொண்டது பாராட்டுக்குரியது. அதே சமயம் தங்களால் பணி நியமனம் செய்யப்பட்ட மேற்கண்ட விருநகர் மற்றும் சாத்தூர் யூனிட்டைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள் கடந்த பத்து மாதங்களாக ( இன்னும் இரண்டு மாதங்கள் சென்றால் ஒரு ஆண்டு நிறைவடைந்து விடும் ) மேற்குறிப்பிட்ட எந்த விதமான பணப்பலன்களையுமே பெறாமல் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட நிலையில் வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டு இருப்பது தங்களுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? அல்லது கண்டும் காணாமல் கல் நெஞ்சாக இருக்கிறீர்களா ? 

இதில் எதுவாக இருந்தாலும் உங்களது நிர்வாகம் சான்றோர் பெருமக்களால் எள்ளி நகையாடக் கூடியதே! எங்களுக்கான நிதி ரூபாய்  40 கோடிக்கு மேல் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்த பின்பும் அதனை அரசிடமிருந்து ரிலீஸ் செய்து பெற்றுத் தர வேண்டிய தார்மீகப் பொறுப்பு யாருடையது ? அந்தப் பொறுப்பு உங்களுக்கு இல்லையா? ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பெற்றுத் தர ஓரிரு மாதங்கள் கால தாமதமாகலாம். சுமார் ஓராண்டு கால தாமதமாகும் அவல நிலை தங்களால் செயற்கையாக உங்களது. அசிரத்தையான நிர்வாகச் சீர் கேட்டால் உருவானதாக இருக்குமே தவிர வேறு எந்தக் காரணத்தையும் சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது. எங்களது விருதுநகர் யூனிட் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வாடகைக்கட்டிடத்தில் இயங்கி வருவதும் தாங்கள் அறிந்ததே. அந்த வாடகைக் கட்டிடத்திற்கு எந்த விதமான முன் பணமோ , வாடகையோ ஒரு பைசா கூட இது வரை தரவில்லை.

அந்த அலுவலகத்திற்கான E.B. BILL, WATER BILL அனைத்தும் கையிலிருந்து தான் கட்டி வருகிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. அலுவலகத்திற்குத் தேவையான மேஜை , நாற்காலி  அனைத்தும் நமது சர்வோதயாவிலிருந்து ரூபாய் ஒரு இலட்சத்திற்கு கடனாகப் பெற்று பயன்படுத்தி வருகிறோம். இந்தக் கடனுக்கு சர்வோதயாவிடம் எத்தனை முறை தவணை கேட்பது? அவமானம் உங்களுக்கா? அல்லது எங்களுக்கா ? அரசாங்கத்திற்காக தேவையில்லாமல் நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும். 

அலுவலகம் இயங்கி வரும் வீட்டுக்காரர் வாடகை கொடுக்க முடியா விட்டால் வீட்டைக் காலி செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இத்தனை அவமானங்களையும் நாங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் சரியான நேரத்தில் நிதியை உள் நோக்கத்துடன் பெற்றுத் தராததால் விளைந்தது தான். இந்த இலட்சணத்தில் இந்த சப்ஜெக்ட் தொடர்பாக சென்னையிலே ஆய்வுக் கூட்டம் இரண்டு தடவை நடந்தேறியுள்ளது. ரயில்வேக்கு நிலம் எடுத்துக் கொடுக்கிறோம் என்பதற்காக இரயிலில் இலவச பாஸா கொடுக்கிறார்கள்? மேலும் இப்பொருள் தொடர்பாக எடுக்கப்படும் கலர் ஜெராக்ஸ் , மேப் அனைத்திற்கும் ஆயிரக்கணக்கில் கடன். இன்னும் எவ்வளவோ கேவலங்கள். எங்களுக்கு அல்ல. உங்களது நிர்வாகத் திறமையின்மைக்கு. 

thasildhar's whatsapp message


இது விருதுநகர் யூனிட்டின் அவல நிலையென்றால் எங்கள் யூனிட்டுகளில் பணி புரிபவர்கள் (30 குடும்பங்கள் ) தொடர்ந்து ஓராண்டை நெருக்கி ஊதியம் பெறாமல் இருப்பவர்களின் நிலைமையைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா? குடிக்கும் தண்ணீரிலிருந்து குளிக்கும் தண்ணீர் வரை எல்லாமே காசு. அரசு ஊழியர்களின் வாழ்வாதாரமே அவர்களது மாதாந்திர ஊதியம் தான். அந்த ஊதியம் இல்லாமல் ஓரிரு மாதங்கள் சமாளிக்கலாம். ஓராண்டு காலம் வரை உங்களால் ஊதியம் இல்லாமல் உங்கள் குடும்பத்தை நடத்த முடியுமா ? மளிகைக் கடைக்காரனும் காய்கறிக் கடைக்காரனும் ஓரிரு மாதங்கள் கடன் கொடுப்பான். வருடம் முழுவதும் கடன் கொடுப்பானா ? நாங்கள் அனைவரும் சோற்றுக்குப் பதில் மண்ணையா தின்பது ? குடி தண்ணீருக்குப் பதில் காற்றையா குடிப்பது? உங்களுக்கு சிறு குழந்தைகள். அரசின் அங்கன் வாடியில் சேர்த்து விட்டு விளம்பரம் தேடிக் கொள்வீர்கள். எங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு இந்த  ஜுன் மாதத்திலே எழுபது ஆயிரம் கொடு. எண்பதாயிரம் கொடு என்கிறான். பத்து மாதமாக சம்பளமே வாங்காமல் வயிற்றுப் பாட்டுக்கே கஷ்ட ஜீவனம் என்று பிள்ளைகளை படிக்க வைக்காமல் விட்டுவிடவா முடியும்? வட்டிக்குத்தான் பணம் கடன் வாங்க வேண்டும். இந்தக் கடனை பின்பு கட்டி விடலாம் என்றால் இதற்கான வட்டியை யார் கட்டுவது? நீங்கள் தான் கட்ட வேண்டும். இந்த மாதம் எங்களுக்கு தீபாவளி முன் பணமும் கிடையாது. இந்த ஒரு மாதம் மட்டும் சம்பளம் என்ற பெயரில் தீபாவளிக்காக எங்களது சம்பளத்தையே எங்களுக்கு அரை குறையாக பிச்சை போட்ட கொடுமையை இறைவன் கூட சகித்துக் கொள்ள மாட்டான். 

தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ளவர்களுக்குக் கூட பாதிச் சம்பளம் பிழைப்பூதியமாக வழங்குவார்கள். அவர்களை விட எங்களது நிலைமை உங்களது பொற் கால ஆட்சியில் இழி நிலையாகி விட்டது. இதற்கு யார் தார்மீகப் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? இந்த நிலையில் நீங்கள்  உங்களது குடும்பத்தார் மனைவி மக்களுடன் உல்லாசமாக தீபாவளி கொண்டாடலாம். எங்கள் வீடுகளில் இழவு விழுந்த வீடாக தீபாவளிக் கொண்டாட்டம் எதுவுமே கிடையாது. எனது பொது வைப்பு நிதிக்கணக்கில் சந்தா பிடித்தம் செய்து பத்து மாதங்கள் ஆகி விட்டது. அப்படி இருக்கும் போது அதற்காக அரசாங்கம் தரும் வட்டிப் பணம் எனக்கு இழப்பு தானே. இந்த செயற்கையான இழப்பை எனக்கு ஏற்படுத்தியது உங்களது சீர் கெட்ட நிர்வாகம்தானே! இந்த இழப்பை நீங்கள் எனக்கு எப்படி ஈடு கட்டிக் கொடுக்கப் போகிறீர்கள்? உங்களால் நான் ஏன் இந்த இழப்பை ஏற்க வேண்டும்? ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசாங்கம் சொன்னதாக எந்தவொரு மாவட்ட ஆட்சியரும் செய்யாத செய்ய விரும்பாத அருவருக்கத்தக்க 17 (பி ) குற்றச்சாட்டுக் குறிப்பாணையை அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடப்பதாகக் காட்டிக் கொள்ள இராஜனை மிஞ்சிய இராஜ விசுவாசியாக நீங்கள் மத்திய அரசிடமிருந்து  ‘மாற்றத்தின் வெற்றியாளர் ’  விருதினை தங்களது அயராத உழைப்பால் பெற்றுத் தந்தவர்கள் மீதே எவ்வளவு அக்கறையுடனும் ஆவலுடனும் போட்டு நான் ஒரு சிறந்த இராஜ விசுவாசி என்று அரசிடம் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் முன்னிலை வகித்தீர்களோ,  அதே அக்கறையும் ஆவலும் அதே அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றுத் தருவதில் காண்பிக்கவில்லையே! ஏன்? உங்களுக்கு கீழ் நேரடியாகப் பணியாற்றி வரும் எங்களுடைய ஊதியத்தையே அரசு நிதி ஒதுக்கியும் பெற்றுத்தர மனமில்லாத நீங்களா,  இந்தப் பின் தங்கிய மாவட்டத்தின் பாவப்பட்ட மக்களின் குறைகளை,  திங்கட் கிழமை தோறும்  நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்,  மாதா மாதம் நடைபெறும் மனு நீதி நாள் கூட்டம்,  வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அம்மா திட்டம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் திட்டங்களின் மூலம் தீர்க்கப் போகிறீர்கள்? பாவம் விருதுநகர் மாவட்ட மக்கள். எங்களுக்கான நிதியை அரசிடமிருந்து பெறுவது தொடர்பாக அரசாங்கத்திடம் நீங்கள் எத்தனை முறை முயற்சி செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா ? 

thasildhar's whatsapp message


எங்களது இந்தக் கேடு நிலையில் எங்களை டெங்கு காய்ச்சல், சதுரகிரி மலை, கஜா புயல், சட்டம் ஒழுங்கு போன்ற சிறப்பு பணிகளுக்கும் அனுப்புவதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது ?  சென்ற ஆண்டு கஜா புயல் பேரிடர் மேலாண்மை பணிக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு உடனே புறப்பட வேண்டும் என்று இரவோடு இரவாக அனுப்பி வைத்தீர்கள். அங்கு எத்தனை நாள் டூட்டி? எவ்வளவு பணம் செலவாகும்? நமது வீட்டில் உள்ளவர்களின் தேவை என்ன? என்று வீட்டிற்கு திரும்பி வருவோம்? என்று ஒன்றுமே தெரியாத நிலையில் சுமார் இரண்டு வாரங்கள் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி மூன்று நேரமும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அந்த சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் மருத்துவமனை சென்று அதற்கும் செலவு செய்து அவதிப்பட்டு வந்த எங்களது செலவை ஈடு கட்ட பயணப்படி இது வரை நீங்கள் பெற்றுத்தந்தீர்களா? அடுத்த புயலும் வரப் போகிறது. வேலை வாங்குபவர் தானே கூலியும் கொடுக்க வேண்டும். இவ்வளவு கேவலமான நிலையிலும் நாங்கள் எங்களுக்கு இட்ட அனைத்துப் பணிகளையும் தட்டாமல் தான் செய்து வருகிறோம். உங்களது விருப்பு வெறுப்பு நிர்வாகம் / நிர்வாகச் சீர் கேடு குறித்து பொதுத் தளத்தில் நீங்கள் எங்களுடன் விவாதிக்கத் தயாரா? சவால்! எங்களுக்கு நீங்கள் போடும் அடுத்த பிச்சைக்காசு வரும் தைப் பொங்கலுக்கு எதிர்பார்க்கலாமா ? இந்திய வரலாற்றில் முகலாயப் பேரரசர்களில் அக்பரது நிர்வாகமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஔரங்க சீப்பின் நிர்வாகமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்தில் உங்களது நிர்வாகமும் பதிவு செய்யப்படும். வரலாறு உங்களை விடுதலை செய்யாது. மீண்டும் தீபாவளி வாழ்த்துகளுடனான வணக்கம்.’ 

இவ்வாறு அந்த வாட்ஸ்-ஆப் வாழ்த்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தாசில்தார் இரா.ராமநாதன்!

 


 

சார்ந்த செய்திகள்