
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு, இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான தா.பாண்டியன் 85 வயதாகியும் கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலைக்கு மேல் தா.பாண்டியன் உடல்நிலை இயல்பான நிலைமைக்கு திரும்பினார். இதையடுத்து, ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
Follow Us